இமயமலை எனும் அதிசயம்!

top-news
FREE WEBSITE AD

சிகரங்கள், பள்ளத்தாக்குகள், ஏரிகள் என பலவற்றை கொண்டவை இமயமலை. ஹிந்துக்கள், பெளத்தர்களுக்கு இமயமலையில் புனித இடங்கள் பல உண்டு.திபெத், பூட்டான் சிக்கிம், லடாக் என பல இடங்களில் வஜ்ராயன புத்தத் தலங்களும் உண்டு. இவற்றில் அதிசயங்களும், ரகசியங்களும் நிறைய உண்டு . அவற்றில் சில:

ரூப்குண்ட் ஏரி:



உத்தரகண்ட் சமோலி மாவட்டத்தில் திரிசூல் மலையின் மடியில், 5,020 மீ. உயரத்தில் இரண்டு மீட்டர் ஆழம் மட்டுமே உள்ள பனிப் பாறை ஏரி இது.குளிர் காலத்தில் உறைந்து விடும். அப்போது ஏரியின் கரைகளிலும், உள்ளும் ஏராளமான எலும்புக் கூடுகள், மரக்கலைப் பொருள்கள், தோல் செருப்புகள், இரும்பு ஈட்டிகள், மோதிரங்கள் உள்ளிட்டவை காணப்படும். இதனால் 'எலும்புக் கூடு ஏரி', 'மர்ம ஏரி'என அழைக்கின்றனர். இந்த எலும்புகள் யாருடையவை என்பது புரியாத புதிர். 'நேஷனல் ஜியகிராபிக்' இதழ் இந்த எலும்புக்கூடுகளை ஆய்வு செய்தபோது, அவற்றில் சிலவற்றில் சதை உள்ளதை கண்டுபிடித்தனர்.

'கன்னோஜ் மன்னன் ராஜா ஜஸ்வால் தனது கர்ப்பிணி மனைவி ராணி பாலம்பா, வேலையாள்கள், நடனக் குழுவினர் மற்றும் பலருடன் நந்தா தேவி கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கடுமையான ஆலங்கட்டி மழை பெய்து, அவர்கள் அந்த இடத்திலேயே இறந்தனர் என்பது தகவல். இது உண்மையாக இருக்கலாம் என நினைக்கும் வகையில் எலும்புக் கூடுகளின் தலையில் பலருக்கு ஆழமான காயம் வட்டமாக உள்ளது' என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கங்கர் புன்சும்:
24,836 அடி உடைய உலகின் மிக உயரமான மலை. இந்தப் பகுதியில் வசிக்கும் சோங்கா இன மக்களின் மொழியில், 'மூன்று ஆன்மிகச் சகோதரர்களின் வெள்ளை சிகரம் 'என அழைக்கின்றனர். பூட்டானில், திபெத்திய எல்லையை ஒட்டியுள்ளது. ஒரு ஜப்பானிய குழு வெற்றிகரமாக ஏறி, இரண்டு கி.மீ. மட்டுமே மீதியுள்ள சூழலில் ஏறக் கூடாது என திருப்பி அழைக்கப்பட்டனர்.

'இந்த சிகரத்தின் உச்சியில் தெய்வங்கள் வசிக்கின்றன. கூடுதலாக அருவறுப்பான பனி மனிதன் வாழ்கிறான். அவனை தொந்தரவுப்படுத்தக் கூடாது'என 'பூட்டானின் புத்த மதத்தினர் நம்புகின்றனர். தற்போது நிரந்தரமாக மலை ஏறுவதற்கான தடையை பூட்டான் அரசு விதித்து விட்டது. இங்கு திடீர் சப்தங்களும், வெளிச்சங்களும் தெரிவதாக இந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கியான்கஞ்ச்:
இமயமலையின் தொலைதூரத்தில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் வடகிழக்கில் மானசரோவர் ஏரியும், அருகில் ஷம்பால பகுதியில் கியான்குஞ்ச் அமைந்துள்ளது. மிகவும் புனிதமான, ரகசியம் பாதுகாக்கும் இடம். இந்த ஏரியில் பல நூறு வகையான அழகான பூக்கள், பலவிதமான சுவையான பழ மரங்கள் இருப்பதுடன் அவை ஆண்டு முழுவதும் பூத்துக் கொண்டேயிருக்கின்றன.

'இங்குள்ள கற்பக விருட்சம் மரத்தின் அருகில் நின்று எதை நினைத்தாலும் நிறைவேறிவிடும். இந்த பகுதியில் காலங்களைக் கடந்த யோகிகள் வசிக்கின்றனர். இந்த பகுதியை சுற்றியுள்ள ஆற்றல் கவசங்களானது இந்த பகுதியை உலகின் மற்ற பகுதிகளிலிருந்து மறைக்கிறது. பள்ளத்தாக்கு முழுவதும் பால் போன்ற வெண்மையான ஒளியால் மறைக்கப்பட்டுள்ளது. இதற்கு சந்திரன், சூரியன் காரணமில்லை. இங்கு பாஸ்பரிக் என்ற தாவரமே கட்டளைக்கு ஏற்ப ஒளியை தருகிறது' என்கின்றனர் இந்தப் பகுதி மக்கள்.இங்குள்ளவர்கள் ஆதிபராசக்தியை வணங்குகிறார்கள். இங்குள்ள பலருக்கு குண்டலினி சக்தி கை வந்த கலையாம்.

பூட்டானின் பரோ தக்த்சங் மடாலயம்:



பூட்டான் பரோ பள்ளத்தாக்கின் குன்றின் ஓரத்தில் உள்ள ஒரு பிரமிக்க வைக்கும் மடாலயம். பூட்டானில் பெளத்த இயக்கத்தை அழிக்க முயன்ற ஒரு அரக்கனை அடக்குவதற்காக குரு ரின் போச்சே மூன்று ஆண்டுகள் தவம் செய்த இடம். இங்கு ஒரு புலி இறங்கி அவருடன் கூடவே இருந்ததாம். அதனால் தான் 'புலிக்கூடு மடாலயம்' என பெயர் வந்தது.'தக் தசங்க்' என்றால் புலிக்கூடு. செங்குத்தான மலையின் வழியே பலர் ஏறுவது அதிசயம். ஒரு குன்றின் மீது தொங்குவது போல் உள்ளது .உள்ளே 'பத்ம சாம்பவா' எனும் ரின்போச்சே சிலையை தரிசிக்கலாம்.

குருடோங்மார் ஏரி:



சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில் உள்ள பெரிய இமயமலையில் 5,430 மீ. (17,800அடியில்) உயரத்தில் இந்த ஏரி உள்ளது.இந்தியாவின் மிக உயரமான இடத்தில் உள்ள ஏரிகளில் இதுவும் ஒன்று. பெளத்தர்கள், சீக்கியர்களின் புனித இடம். ஆண்டின் பெரும்பாலான நாள்கள் இந்த ஏரி உறைந்திருக்கும். ஒருமுறை திபெத் சென்று விட்டு குரு பத்ம சாம்பவா இந்த ஏரியை பார்வையிட்டபோது, உள்ளூர் பக்தர்கள் குடிநீர் பிரச்னையாக உள்ளது எனக் கூறினர். குரு உடனே தண்ணீரை ஒரு இடத்தில் தொட்டபோது, அந்த இடம் மீண்டும் உறையவே இல்லை. இதனால் புத்தர்கள் இங்கு புனித யாத்திரை வருகிறார்கள்.

இங்கு குருநானக் வந்து ஏரியை ஆசிர்வாதம் செய்ததால், சீக்கியர்களும் இதனை புனிதமாக கருதுகின்றனர். இப்போதும் ஏரியில் குரு பத்ம சாம்பவா தொட்ட பகுதி, உறையாமலே மக்களுக்கு குடிநீர் அளித்துவருகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *