தமிழ் நிகழ்ச்சிகளுக்கும், மாணவச் செல்வங்களின் முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்போம்! - டாக்டர் பழனீஸ்வரன் தியாகராஜன் நம்பிக்கை
- Tamil Malar (Reporter)
- 28 Apr, 2024
மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் பிரதிநிதிச் சபையின் ஏற்பாட்டில் 26 ஆம் ஆண்டு இலக்கியப் பயணம் நிகழ்ச்சி, ஓம்ஸ் குழுமத்தின் நிர்வாகத் தலைவரும் மலர் டிவியின் நிர்வாக இயக்குநருமாகிய டாக்டர் பழனீஸ்வரன் தியாகராஜன் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது. உடன் டாக்டர் பழனீஸ்வரன் அவர்களின் துணைவியாரும் வருகை தந்து சிறப்பு செய்தார்.
சொற்போர், செய்தி வாசிக்கும் போட்டி, சிறுகதை எழுதும் போட்டி, கவிதை எழுதும் போட்டி, புதிர்ப்போட்டி, கதை கூறும் போட்டி என பல்வேறு போட்டிகள் தமிழ்ப்பள்ளி முதல் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
மலேசியாவில் 26 ஆண்டுகளாக நடத்தப்படும் இலக்கியப் பயணம் எனும் நிகழ்ச்சி, இவ்வாண்டு சிறப்பாக நடைபெற மலர் டிவி குழுமத்தின் ஆதரவும் மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் வழிகாட்டலும் இன்றியமையாதது என இவ்வாண்டு இலக்கியப் பயணத்தின் இயக்குநர் கோமலேஸ்வரி முருகன் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படும் இந்நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தாம் உளமார நன்றி நவில்வதாகவும் தொடர்ந்து அடுத்தாண்டும் இலக்கியப் பயணம் நிகழ்ச்சி தொடரும் என்றும் அவர் நம்பிக்கையளித்தார்.
மலேசியாவில் நற்றமிழ்ப்பேச்சாளர்களைஅடையாளம் கண்டு ஒருங்கிணைத்து செயல்படும் மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றம் சொற்போர் பேச்சுக்கலை சார்ந்த போட்டிகளுக்கு வழிகாட்டலாகத் தொடர்ந்து செவ்வென பணியாற்றும் என மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் தலைவர் சுரேந்திரன் உறுதியளித்தார்.
மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றம் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் எந்தவொரு பிரதிபலனும் எதிர்பாராது தொண்டாற்றி வர அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்து வரும் மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் புரவலர் ஓம்ஸ் பா.தியாகராஜன் அவர்களுக்குத் தனது உளமார்ந்த நன்றியையும் “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை, என்நோற்றான் கொல்எனும் சொல்” என்ற குறளுக்கு இணங்க, ஓம்ஸ் பா.தியாகராஜன் அவர்களின் புதல்வர் 26 ஆம் இலக்கியப் பயணத்திற்கு ஆதரவளித்து தலைமை தாங்கியிருப்பது நன்றிக்குரியது என்று தெரிவித்தார். அடுத்தடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து தமிழ்ப்பணியாற்ற வேண்டும் என சுரேந்திரன் கேட்டுக் கொண்டார்.
மலேசியாவில் 26 ஆண்டுகளாகப் பல்கலைகழக மாணவர்கள் தமிழ் நிகழ்ச்சியை நடத்துவது பெரும் போற்றுதலுக்குரியது என ஓம்ஸ் பா.தியாகராஜன் அவர்களின் புதல்வரும், ஓம்ஸ் குழுமத்தின் நிர்வாகத் தலைவரும் மலர் டிவியின் நிர்வாக இயக்குநருமாகிய டாக்டர் பழனீஸ்வரன் தியாகராஜன் புகழாரம் சூட்டினார்.
நம் சமுதாயத்தின் உரிமைக்குரலாய் எப்போதும் ஒலிக்க தமிழில் சிறந்த ஊடகம் வேண்டும் என்கிற எங்களின் கனவுதான் நமது மலர் டிவி. பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துப் பயணிக்கத் தொடங்கியிருக்கிறோம்.
உலகச் சங்கத் தமிழ் மாநாடு, அம்பேத்கார் மாநாடு என பிரமாண்ட மாநாடுகள் முதல், பல்வேறு தமிழ் சார்ந்த முக்கிய நிகழ்ச்சிகளில் நமது மலர் டிவி மற்றும் ஓம்ஸ் அறவாரியம் முக்கிய பங்காற்றியிருக்கிறது.
மக்கள் பிரச்னைகள், பள்ளிகள் தொடர்பான செய்திகள், ஆலய நடவடிக்கைகள், அரசியல், கலை, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் உலகின் சுவாரஸ்யமான விஷயங்களையும் மலர் டிவி எப்போதும் வழங்கிக்கொண்டே இருக்கும்.
தமிழுக்காகவும், தமிழ்ச் சமுதாயத்திற்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை வைத்துள்ளோம். இன்றைய நிகழ்வும் அதில் ஒரு பகுதிதான்.
நம் சமுதாயத்தின் நன்மைக்காக நம் மக்களின் முகமாய், முகவரியாய் எப்போதும் நம் மலர் டிவி குடும்பம் இயங்கும் என்பதை நான் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த இலக்கியப் பயணம் போட்டியின் மூலமாக மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்திற்கு ஆதரவளித்துள்ளோம். சிறப்பான ஏற்பாடுகளை மாணவர் பிரதிநிதிச் சபையினர் செய்துள்ளனர்.
மாணவர்களின் ஆற்றல் வியக்க வைக்கிறது. பள்ளிக் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரின் படைப்புகளும் சிறப்பாக இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இது போன்ற தமிழ் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஓம்ஸ் அறவாரியம் மற்றும் மலர் டிவி எப்போதும், இது போன்ற தமிழ் நிகழ்ச்சிகளுக்கு, நம் மாணவச் செல்வங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.
தொடந்து அடுத்தடுத்து இது போன்ற போட்டிகளை நடத்தி, திறமையானவர்களை நம் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்துங்கள்.
தமிழோடு உங்கள் வளர்ச்சி எப்போதும் தொடரட்டும் என்று அனைவரையும் வாழ்த்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார்.
மேலும், இந்த இலக்கியப் பயணத்தில் பங்கேற்று, செய்தி வாசிக்கும் போட்டியில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு மலர்.டிவியில் செய்தி வாசிக்கும் வாய்ப்பையும் தாம் வழங்குவதாக அவர் நம்பிக்கை அளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *