பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு பாசத் திருவிழா!

top-news
FREE WEBSITE AD

மகிழ்வித்து மகிழ்வதைப் போன்று ஓர் உன்னத திருப்தி எதுவும் இல்லை. இன்னொரு முகத்தின் புன்னகையைத் தவிர்க்கும் மனிதர்கள் பெருகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், நம்முடன் இருப்பவர்களை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ள நினைக்கும் மனசு உண்மையில் காலத்தின் வரம்தான்.

அத்தகைய மாமனசுக்காரர் ஒருவரின் அன்பின் உபசரிப்பாய், ஆசிரியப் பெருமக்களுக்கான பாசத் திருவிழா, அண்மையில் கிள்ளானில் நடைபெற்றது.

தான் வாரியத் தலைவராக இருக்கும் பள்ளியிலிருந்து பதவி உயர்வு, பணியிட மாற்றம் மற்றும் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களைக் கௌரவிக்கும் விதமாகப் பாராட்டு விருந்துபசரிப்பு நிகழ்வாக அவ்விழா நடைபெற்றது.

அட அன்பின் கொண்டாட்டத்தை இப்படியும் அமைத்துக்கொள்ளலாமா? இத்தனை ஈரத்தோடு, இவ்வளவு பாசத்தோடு இருக்கிறதா நமக்கான உறவுகள்? இவர்களுக்கு நாம் என்ன கைமாறு செய்யப்போகிறோம்? என்று,  ஆசிரியப் பெருமக்கள் நெகிழும் அளவுக்கு அமர்க்களமாய், அன்பின் சங்கமமாய் அமைந்தது விழா.

இந்தப் பாசக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து, கண்டு மகிழ்ந்து, அவர்களை ஆராதித்து, தங்கப் பதக்கம் கொடுத்து மகிழ்வித்து மகிழ்ந்த அந்த மாமனசுக்காரர் ஐயா ஓம்ஸ் தியாகராஜன் அவர்கள்.

அந்த அன்பில் ஆனந்தக் கண்ணீர் மல்க.... பாராட்டுகளைப் பெற்றவர்கள், கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியிலிருந்து பதவி உயர்வு, பணி மாற்றம் மற்றும் பதவி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்.

மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநரும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் அவர்களின் ஆதரவோடு, கிள்ளான், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியின், பள்ளி வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டில், இந்த விருந்துபசரிப்பு நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

கிள்ளான், Bandar Park Land-ஸில் உள்ள Maju Dynamic Coffee House-இல் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு ஓம்ஸ் பா.தியாகராஜன் மற்றும் அவர்தம் துணைவியார்  உட்பட பல முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

ஆசிரியர்களின் உற்சாகப் பங்களிப்பில், ஆடல் பாடல் என நிகழ்வு முழுக்க ஆரவார மகிழ்ச்சி அரங்கை நிரப்பியது. கௌரவிக்கப்பட்ட சிறப்புக்குரியவர்கள் இந்த அன்பில் நெகிழ்ந்து கண்கலங்கியது, பள்ளிக்கும் அவர்களுக்குமான பேரன்பைக் காட்டியது.

ஆசிரியர்களுக்கு மத்தியில் மன அழுத்தம் அதிகரித்துவிட்ட சூழலில், இங்கே ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து, கண்கலங்கி, கதைகள் பேசி, உற்சாக கூச்சலிட்டு மகிழ்ந்து சிரித்தது ஆறுதலாய் இருந்தது.

இந்நிகழ்வில் சுசிகலா கன்னியப்பன், ஜெயந்தி முருகேசன், நளானி வேங்கடசாமி, சந்திரமதி சுப்ரமணியம், நிர்மலா தேவி சடயகவுண்டன், தனபாக்கியம் நாமதேவன், சுமதி ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு சிறப்பு நினைவுப்பரிசுகளோடு, தங்கப்பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தமிழ்ப்பள்ளியின் பக்கம் திருப்புங்கள்!

இந்நிகழ்வில் பேசிய ஓம்ஸ் பா.தியாகராஜன், “பதவி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்  பேரப்பிள்ளைகள், குடும்பம் என மகிழ்ச்சியாக இருப்பதோடு, தங்களது பேரப்பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளில் படிக்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். தங்கள் குடும்பம் என்று மட்டும் இல்லாமல் அருகில் உள்ளவர்கள், தெரிந்தவர்களின் குழந்தைகளையும் தமிழ்ப்பள்ளியின் பக்கம் திருப்புங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் கற்றுக்கொடுத்து, தற்போது பதவி உயர்வு பெற்றிருக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளது. மென்மேலும் உயர்வுகள் கிடைக்கட்டும். அதேபோல், பணியிட மாற்றம் பெற்று வேறு பள்ளிகளுக்குச் சென்றிருக்கும் சொந்தங்கள், இப்பள்ளியின் பெருமையை நிலைநாட்டுங்கள். செல்லும் இடங்களில் எல்லாம்  உங்களது நற்பணிகள் தொடரட்டும் என்று வாழ்த்தினார்.

சில பள்ளிகளுகளுக்குச் செல்லும் போது “என்னை நினைவிருக்கிறதா?” என்று சில ஆசிரியர்கள் கேட்பார்கள். பிறகு நான் இங்கு மாறி வந்துவிட்டேன் என்பார்கள். அந்த விஷயம் எனக்கு சங்கடமாய் இருந்தது. நம் பள்ளியில் இருந்து இன்னொரு பள்ளிக்கு நம்ம ஆசிரியர் வந்திருக்கிறார், நமக்குத் தெரியவில்லையே என வருத்தமாக இருந்தது. அதனால்தான், இனியும் நாம் யாரையும் சும்மா அனுப்பக் கூடாது என்ற எண்ணத்தில் இதுபோன்ற ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்யலாம் என்ற எண்ணம் கொண்டேன். அந்த வகையில் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியிலிருந்து பணி மாற்றம், பதவி ஓய்வு, பதவி உயர்வு என நம் ஆசிரியர்கள் செல்ல நேர்ந்தால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு விழாவை நடத்த வேண்டும் என நினைத்தோம். பள்ளி வாரியத் தலைவர் என்ற முறையில் எனது கோரிக்கையை பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம் ஏற்றுக்கொண்டு இவ்விழாவை இவ்வளவு சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். இதற்கு அனுமதி அளித்த தலைமை ஆசிரியர் செல்வநாதன் அவர்களுக்கும் மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டு பெறும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறேன்” என ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.


 தத்து தந்தை!

சிம்பாங் லீமா பள்ளிக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் ஐயா ஓம்ஸ் தியாகராஜன் அவர்கள். இப்பள்ளியின் முன்னேற்றத்தில் பெரும் அக்கறை கொண்டவர். இப்பள்ளிக்காக வாரியத் தலைவர் என்ற முறையில் மட்டுமல்லாமல், நல் நெஞ்சம் கொண்ட மனிதராக, தமிழ்ப்பள்ளிகள் மீது கொண்ட பற்றுதலின் காரணமாக ஏராளமான நற்காரியங்களைச் செய்து வருவதோடு, மேலும் தனது சேவையைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். என்னைப் பொருத்தவரை அவர் இப்பள்ளியின் தத்து தந்தை.

ஒரு தந்தையாய் அவரின் பணி அளப்பரியது என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வநாதன் முனியாண்டி பேசினார்.

மேலும், பெரும்பாலும் மன அழுத்தம், கோபம் என நம் வேலை அமைந்துவிடுகிறது. ஆனால், இதுபோன்ற அங்கீகாரம், அழகான பாராட்டு நம்மை ஆறுதல்படுத்துகிறது. பள்ளியில் இருந்து சென்ற ஆசிரியர்களுக்கு இது போன்ற அழகான சூழலில், அற்புதமான விருந்துபசரிப்பு கொடுத்து மகிழ்வது போற்றுதலுக்குரியது. அது எத்தனை ஆசிரியர்கள் இருந்தாலும் எல்லாக் காலத்திலும் இந்த அங்கீகாரம் தொடரும் என நமது தத்து தந்தை ஓம்ஸ் ஐயா சொல்வது மகிழ்ச்சியாய் இருக்கிறது. எனவே ஐயா அவர்களுக்கும், முப்பெரும் சக்திகளாக விளங்கும் பள்ளி வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி நிர்வாகத்தினருக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக தலைமை ஆசிரியர் தமது உரையில் கூறினார்.

 சிறப்பு நிதி விருந்து!

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நாகராஜா சின்னையா பேசுகையில், “தமிழ்ப்பள்ளி என்றாலே ஒரு மரியாதை இருக்கிறது. அந்த வகையில் நம் சிம்பாங்லீமா தமிழ்ப்பள்ளிக்குத் தனி மரியாதை உண்டு. நாட்டின் பெரிய பள்ளி என்பதோடு, தரமான மாணவர்களை உருவாக்கும் ஒரு பள்ளியாகத் திகழ்கிறது. எனவே, இந்தப் பள்ளியை கல்வி அடிப்படையில் மட்டுமல்லாமல், உள்கட்டமைப்பு வசதிகள் அடிப்படையிலும் சிறந்த பள்ளியாக மாற்றவேண்டும். அதற்கு பள்ளி வாரியம் மற்றும் பள்ளி நிர்வாகத்துடன் பெற்றோர் ஆசிரியர் சங்கம் என்றும் உறுதுணையாக இருக்கும். பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். மேலும், சிறப்பு நிதி விருந்து ஏற்பாடு செய்துள்ளோம். பல நல்ல உள்ளங்கள் ஆதரவு நல்கி வருகிறார்கள். அந்த நிதியின் வழி பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.

 அன்பின் ஈரம்!

ஆசிரியர்கள்தான்.... அன்பின் தன்மை உணர்ந்தவர்கள்தான்.... ஆனாலும், குழந்தையாய் அவர்கள் கண்கலங்கிய நிமிடங்களில் அனைவரின் விழிகளிலும் நீர் சூழ்ந்தது. பரிசு பெற்றவர்கள் நன்றி தெரிவித்த அந்த நிமிடங்களில், ஓர் அங்கீகாரம் என்பது எப்படிச் சிறந்தது என்பதைப் புலப்படுத்தியது. பள்ளியை விட்டுச் சென்ற அந்த ஆசிரியர்கள் பகிர்ந்துகொண்ட பள்ளியைப் பற்றிய நினைவுகளில் முழுக்க  முழுக்க ஈரமே நிரம்பி இருந்தது.


 சுசிகலா கன்னியப்பன்

“கனவில் கூட காணாத ஒரு நிகழ்வாக இதைப் பார்க்கிறேன்.நிறைய நிகழ்வுகள் போயிருக்கிறேன்.... அதுபோல்தான் இருக்கும் என நினைத்தேன். ஆனால், இத்தனை பிரமாண்டமாய் எங்களைக் கௌரவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. நான் ஆசிரியர் ஆக வேண்டும் என்பது அப்பாவின் கனவு. அதை நிறைவேற்றினேன். அந்த உன்னதத்தை இன்று உணர்கிறேன். இந்த ஆசிரியர் தொழிலை ஆசிர்வாதமாக நினைக்கிறேன். என் அப்பா, அண்ணன் இல்லை என்றால் நான் ஆசிரியராக இல்லை. அவர்களுக்கும் நன்றி சொல்கிறேன்!”

 நளானி வேங்கடசாமி

“நான் 18 தலைமை ஆசிரியர்களின் கீழ் வேலை செய்திருக்கிறேன். சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில்தான் முதலில் வந்து சேர்ந்தேன். 1985 செப்டம்பர் மாதம் பணியைத் தொடங்கினேன். பின்னர் 1988 எமரால்டு பள்ளி,1989 பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளிக்குப் போனேன். அங்கு 20 வருடங்கள் வேலை செய்தேன். பின்னர் புக்கிட் ராஜா, மேரு தமிழ்ப்பள்ளிகளை அடுத்து 2016-ல் மீண்டும் சிம்பாங் லீமா வந்தேன். 1 ஆம் ஆண்டு முதல் 6-ஆம் ஆண்டு வரை படித்துக் கொடுத்திருக்கிறேன். எல்லா ஆசிரியர்களும் நல்ல ஆசிரியர்கள்தான் இங்கே. எல்லாரும் நல்லா இருக்கணும்!”

 சுமதி இராதாகிருஷ்ணன்

“நன்றிகள் பல... இதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை.. எப்போதும் இந்தப் பள்ளியில் நிகழ்வுகள் நடக்கும் போது அந்தப் படையில் நானும் ஓர் ஆளாக இருப்பேன். ஆனால், இப்போது நான் வெளியிலிருந்து வந்திருக்கிறேன். இது வித்தியாசமா இருக்கு. என்னுடைய ஆசிரியர் பணியை இந்தப் பள்ளியில் இருந்துதான் தொடங்கினேன். 13 ஆண்டு காலம். நிறைய அனுபவங்கள். நல்ல நண்பர்கள் அன்பு நட்பு ஒத்துழைப்பு இப்படி நிறைய விஷயங்கள்” என்று கூறியவர், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி எனது தாய் வீடு என்றபோது கண்கலங்கினார். அவரின் சில நிமிட கண்ணீர் மௌனங்களில் அவர் பொழிந்த அன்பு அனைவரையும் நனைத்தது. இங்கிருந்த சூழல் எங்கும் இல்லை. அதற்காக ஆசிரியர்களுக்கு நன்றிகள். உண்மையாலுமே ரொம்ப மிஸ் பண்றேன். நண்பர்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி. ஏற்பாட்டுக் குழுவுக்கும் நன்றி!”

 தனபாக்கியம் நாமதேவன்

“சிம்பாங் லீமா ஒரு சிறந்த பள்ளி என்று  நான் சொல்வேன்.... இந்தப் பள்ளியில் நான் காலடி எடுத்து வைத்த நேரமோ என்னவோ தெரியல.... என்னுடைய இரண்டு பிள்ளைகளையும் நான் டாக்டரா ஆக்கியிருக்கிறேன். நல்ல நேரத்தைக் கொடுத்த பள்ளி. மற்ற பிள்ளைகளும் நன்றாக வருவார்கள். இந்தப் பள்ளியின் ஆசிரியர்கள், இந்தப் பள்ளியின் அதிர்வு, இங்குள்ள மக்கள் எல்லாம் அப்படி. எனக்கு ரொம்ப பிடித்தமான ஆசிரியர்கள் இங்குதான் இருக்கிறார்கள். தலைமை ஆசிரியர் ஒரு சிறந்த மனிதர். இந்தப் பள்ளியில் 22 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். இங்குள்ள ஆசிரியர்கள் பெரும்பாலும் என்னை ஒரு மூத்த ஆசிரியராக நினைத்துப் பழகவில்லை. என்னை தனா என்றுதான் பலரும் அழைப்பார்கள். அதுதான் எனக்கும் பிடிக்கும். வயது குறைந்தவர்களும் அப்படித்தான் அழைப்பார்கள்!”

 நிர்மளாதேவி சடயகவுண்டன்

“ஆரம்பத்தில் மெத்தடிஸ்ட் பள்ளியில் 20 வருடம் வேலை செய்தேன். அடுத்து நார்த் ஹம்போக் பள்ளியில் வேலை செய்தேன். பின்னர் சிம்பாங் லீமா வந்தபிறகு PK1 ஆக இருந்தேன். தற்போது லாடாங் ராஜா மூசா பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றுள்ளேன். சிறிய பள்ளியில் வேலை செய்துவிட்டு சிம்பாங் லீமா வந்தேன். முதன் முதலில் ஆச்சரியப்பட்ட விஷயமே ஆசிரியர்கள்தான். ஆசிரியர்களே இவ்வளவு பேரா? என வியந்தேன். கொஞ்ச ஆசிரியர்கள் இருக்கிற சின்ன பள்ளிகளிலேயே பிரச்னைகள் இருக்கும்.... இங்கு எப்படியோ? என பயந்தேன்.  அடுத்து மாணவர்களை சபை கூடலில் பார்த்தேன். திருவிழா மாதிரி எண்ணற்ற மாணவர்கள். எப்படி சமாளிக்கப் போகிறோம்? என்று நினைத்தேன். ஆனால், ஆசிரியர்கள் எல்லாருமே சிறப்பான ஆசிரியர்கள். பெரிய பள்ளி, அனுபவம் புதுசு என்பதால் வேலை செய்ய கஷ்டமாக இருந்தது முதலில். ஆனால், எல்லாருமே சிறந்த ஆசிரியர்கள். அவர்களின் வேலை சிறப்பாக இருந்தது. மீண்டும் மக்களைப் பார்த்ததில் தனி சுகம்!”

 சந்திரமதி சுப்ரமணியம்

“மிகச் சிறப்பாக இருந்தது நிகழ்ச்சி. மொத்தம் 3 தமிழ்ப்பள்ளிகளில் வேலை செய்திருக்கிறேன். முதல் பள்ளி கேமரன் மலையில் உள்ள புளூவேலி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஐந்து வருடம். பின்னர் கோலாலம்பூர் சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் ஐந்து வருடம். பின்னர் சிம்பாங் லீமாவில் 16 மாதங்கள் அதாவது 483 நாள்கள். தற்போது ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையளாராகப் பதவி உயர்வு பெற்று பணியாற்றுகிறேன். சிம்பாங் லீமாவில் வேலை பார்த்தது சந்தோசமா இருக்கு. நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். அனைத்து ஆசிரியர்களும் எல்லாவிதத்திலும் அதிக திறமை வாய்ந்தவர்கள். எல்லா விஷயமும் அவர்களுக்கு ஆழமா தெரியும். எனவே எந்த விஷயத்தைக் கேட்டாலும் தயக்கம் கொள்வது கிடையாது. என்னை சிறப்பாக வழிநடத்திய அவர்களுக்கு நன்றி!”

நிகழ்வின் தித்திப்பு அங்கமாக, பாராட்டுக்குரிய ஆசிரியர்கள் அனிச்சல் வெட்ட, ஆனந்தத்தில் அனைவரும் ஆர்ப்பரிக்க, ஆடல் பாடல் என அரங்கம் மகிழ்ச்சியில் திளைக்க,  உரிமையான அரவணைப்புகள், உள்ளன்பின் விசாரிப்புகள்,  பகிரப்பட்ட கண்ணீர்த்துளிகள், பாசப் பதிவின் அடையாளமாய் சுயப்படப் பதிவுகள் என இந்த அன்பின் கௌரவிப்பு பாசத்திருவிழாவாய் நெகிழ்ச்சியாய் நிறைவுற்றது!

 

 

 

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *