அப்பனுக்கே அப்பன்!

top-news
FREE WEBSITE AD

ஒரு வீடியோ....

அப்பா படுத்திருக்கிறார்...

அப்பாவின் கட்டிலில், அவரை அணைத்தப்படியே மிக நெருக்கமாக....  அவரின் மகன் பாடல் ஒன்றை 'விசில்' சத்தம் எழுப்பி இசைக்கிறார்.

"இந்தப் பாடல் என்னவென்று தெரிகிறதா?....
என்னவென்று தெரிகிறதா?" என செல்லமாய்.... அப்பாவை அணைத்தப்படி மீண்டும் மீண்டும் அந்தப் பாடலை தன் விசில் சத்தத்தால் நிரப்புகிறார்.

அப்பா கூர்ந்து கவனிக்கிறார்...

மெல்ல வாய் திறக்கிறது...

'பா... பா... பாட்டுப் பாடவா' என அப்பா முணுமுணுக்க....

மகன் பேரானந்தத்தில் அப்பாவைப் பார்த்தப்படியே....

'பாட்டுப்பாடவா.... பார்த்துப் பேசவா..... பாடம் சொல்லவா... பறந்து செல்லவா'.... எனப் பாடலைப் பாடுகிறார்....

கூடவே பாடியவரின் மகளும் படுத்துக் கிடப்பவரின் பேத்தியுமான ஓர் இளம்பெண்ணும் உற்சாகமாக இணைந்துகொள்ள, அன்பின் வெளிச்சம் அந்த வீடு முழுதும் நிரம்புகிறது.....

பாட்டுப் பாடிய அந்த மகனுக்கு வயது 70.

பாடலைக் கேட்டுத் தன்னால் முடிந்த அளவுக்குப் பாட முயற்சித்த, படுத்த நிலையில் கிடக்கும் அந்தத் தந்தைக்கு வயது 100.

100 வயதில், படுத்தப் படுக்கையாய் கிடக்கும் தன் தந்தைக்கு உற்சாகமூட்டும் 70 வயது மகன்... கூடவே தாத்தாவுக்காகப் பாட்டுப்பாடி உற்சாகமூட்டும் பேத்தி...

அங்கே மூத்திர வாடை இல்லை.... அசிங்கம் இல்லை.... வெறுப்பு இல்லை... முழுக்க முழுக்க அன்பின் வாசம்தான்.

இந்தக் காட்சியைப் பார்க்கப் பார்க்க மனம் ஏங்குகிறது....

முதுமையில் தள்ளாடும் அப்பாவை உடைய எல்லா மகன்களும் - மகள்களும்  பார்க்க வேண்டிய அவசியக் காணொளி.

முதியோர் இல்லங்களில் இருப்பவர்களுக்கு மட்டும் இந்தக் காணொளி கண்ணில் பட வேண்டாம்.... பாவம் ஏங்கித் தவிப்பார்கள். அத்தனை அன்பு ததும்பும் வீடியோ அது.

அப்பாவைத் தாலாட்டும் இந்த 70 வயது மகன் இருக்கும் இதே உலகில்தான், 70 வயது அப்பாவைத் தெருவில் நிறுத்தும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

அறம் சொல்லி வளர்க்கத் தெரியாத, அல்லது அறம் என்றால் என்னவென்றே தெரியாத  பெற்றோர்கள் அதிகம் முளைத்திருக்கும் காலம் அது.

உறவுகள் ஒன்றிகூடிப் பேச நாலு வார்த்தைக்கே இப்போது பஞ்சமாகிவிட்டது.

இப்படியான ஒரு காலகட்டத்தில் இது போன்ற அன்பின் கொண்டாட்டங்கள்தான் நமக்கான வரம்.

ஒரு குறும்படம் ஒன்று நினைவுக்கு வருகிறது....
முதிய வயதுஅப்பாவும் மகனும் பூங்காவில் அமர்ந்திருப்பார்கள். அப்பா ஒரு கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்பார்... அதற்கு மகன் சலிப்புற்று ஆத்திரமடைவார்.

அப்பா வீட்டிற்குள் சென்று அவரின் பிரத்தியேக டைரியை எடுத்து, ஒரு பக்கத்தைக் காட்டுவார்.... அதில் சிறு வயதில் இந்த மகன் விடாது கேட்ட கேள்விகளும், அதற்கு இவர் சலிப்புத்தட்டாமல் சொன்ன பதில்களும் இருக்கும். அதைப் படித்துவிட்டு, தன் தவற்றை உணர்ந்து, இப்போது குழந்தையாய் மாறியிருக்கும் தன் அப்பாவுக்குத் தகப்பனாய் மாறுவான். தந்தையைக் கட்டிப் பிடித்து அழுவான்.

இந்த உண்மையைப் புரிந்துகொண்டால், யார் வேண்டுமானாலும் அப்பனுக்கே அப்பனாகலாம்!

- சண்.சிவா

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *