35 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு புள்ளியில் எங்கள் சந்திப்பு... எவருக்கும் அமைந்திடாத வாய்ப்பு!

top-news
FREE WEBSITE AD


' வானம் எனக்கொரு போதிமரம்' என்றார் வைரமுத்து. ஆனால், இங்கே 'வானம் எனக்கான விளையாட்டு மைதானம்'  என்று தன் குறிக்கோளை உயரத்தில் வைத்து, ஒரு பெண் விமானியாய் வெற்றிப் பயணம் மேற்கொண்டு வருகிறார் ஒரு தமிழ்ப் பெண். 

 'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு' என்றவர்க்கு மத்தியில், படிப்பதற்கு மட்டுமல்ல பறப்பதற்கும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என,  விமானியாய் ஒரு ராட்சஷப் பறவையைத் தன் கட்டுக்குள் வைத்து, அகிலத்தையே அளந்துகொண்டிருக்கிறார் காஜாங்கைச் சேர்ந்த பிரிசில்லா.  

முன்னாள் தலைமை ஆசிரியர் ஜான் பாஸ்கோ - எஸ்தர் லீலா தம்பதியரின் புதல்வியான பிரிசில்லா, தான் சிறகு விரித்த தருணங்களைப் பகிர்ந்துகொள்கிறார் நமக்காக...

நீங்கள் யார்?

"நான் பிரிசில்லா. வயது 33. காஜாங்கைச் சேர்ந்தவள் காஜாங் தமிழ்ப்பள்ளியில் எனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினேன். மலேசியத் தொழில்நுட்ப பல்கலைக்கழகமான UTM-மில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றேன்.  பின்னர் 2016 ஆம் ஆண்டு பறப்பதற்கான என் லட்சியத்தின் நீட்சியாய் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் விமானிக்கான பயிற்சியைப் பெற்றேன்.  அதன்பிறகு கத்தார் ஏர்வேஸில் இணைந்து, உலகின் பல நாடுகளுக்கு A320 விமானத்தை இயக்கிப் பறந்துள்ளேன்."

'பைலட்' ஆக வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

"அதுதான் என் லட்சியம். ஒரு பறவையாய் நான் மாறவேண்டும்; அதுவே  என் வேலையாக இருக்க வேண்டும் என்பது ஏனோ எனக்குள் ஒட்டிக்கொண்ட ஆசை. விமானங்களின் பிரமாண்டம் பல நேரங்களில் என்னை வியக்க வைத்துள்ளது. தன் சிறகை விரித்து உயரத்தில் மனிதர்களை வைத்து மாயஜாலம் காட்டும் அந்த பிரமாண்டப் பறவையை நானும் இயக்க வேண்டும்.  எனது கட்டுப்பாட்டுக்குள் அது வரவேண்டும் என்று விளையாட்டாய் ஆசை கொண்டேன். பின்னர் அதுவே லட்சியமாய் மாற.... கனவு நனவாகி இன்று கடக்கிறேன் உலகின் பல நாடுகளை.

பல நேரங்களில் விமானங்கள், விமானிகள் பற்றிய தகவல்களைத் தேடுவேன். இடைநிலைப்பள்ளியை முடித்ததுமே விமானம் இயக்குவதற்கான பயிற்சியை மேற்கொள்ள விரும்பினேன். ஆனால்,  பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க முதலில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தேன்."

வீட்டில் பயப்படவில்லையா?

"எனது குடும்பத்திலோ உறவுகளிலோ யாரும் விமானி ஆனது இல்லை.  அதனால் கொஞ்சம் அவர்களுக்குப் பயம் இருந்தது.  என் ஆசை நிறைவேறுமா? என்ற சந்தேகமும், தயக்கமும் என்னுள் இருந்தது. ஆனால், இறுதியில் எனது இந்தப் பயிற்சிப் பயணத்தில் என் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என எல்லோருடைய ஆசியும் ஆதரவும் முழுமையாகவும், நிரம்பவும் கிடைத்தது."

விமானப் பயிற்சியின்போது என்னென்ன சவால்கள் இருந்தன?

"விமானத்தை இயக்குவது என்பது மிகவும் பொறுப்பு மிக்க ஒரு பணி. மிகவும் சவால் மிக்கதுதான்.  சிறு தவறு கூட ஏற்பட்டு விடக்கூடாது. ஆகவே, ஆரம்பத்தில் சில சிரமங்களை எதிர் நோக்கினேன். என் குடும்பத்தினரின் ஊக்குவிப்பும், தன்னம்பிக்கையும் என்னை மேலும் உற்சாகமாக்கிப் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்க உதவியது."

முதன் முதலில் ஒரு பைலட்டாக பறந்த அனுபவம் எப்படி இருந்ததது?

" என்னுடைய முதல் விமானத்தை இயக்கும் பயிற்சி 2016 ஆம் ஆண்டு பல்லாராட், ஆஸ்திரேலியா பயிற்சி மையத்தில் தொடங்கியது.  அந்த நேரத்தில் என் சகப் பயிற்சியாளர்கள் விமானத்தை இயக்கிப் பறந்தபோது, கொஞ்சம் தயக்கமும், எப்படி நிறைவேற்றப் போகிறேன்? என்ற எண்ணமும் இருந்தது. ஆனால், கொஞ்ச நேரத்திலேயே அதெல்லாம் மறைந்து என் லட்சியம் என்னைத் தட்டிக் கொடுக்க, பறந்தது என் விமானம், என் ஆணைக்கு இணங்க.  இப்போது 8 ஆண்டுகள் கடந்துவிட்டேன். தற்போது உலகத்தின் எந்தப் பகுதிக்கும் விமானத்தை இயக்க நான் தயாராகவே இருக்கிறேன்."

ஒருவர் பைலட்டாக என்ன கல்வித் தகுதி இருக்க வேண்டும்?  இதற்கான பயிற்சிக் கல்லூரிகள் எங்கு இருக்கிறது? எப்படி அணுக வேண்டும்?

" கல்வித் தகுதி என்றால் கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்தில் ஆர்வமும் திறமையும் இருக்க வேண்டும்.  இரண்டு வகையில்  இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.  ஒரு தனியார் விமானப் பயிற்சிக் கல்லூரியில் பயின்று தேர்ச்சி பெறலாம். மற்றது இப்பொழுது பெரும்பாலான விமான நிறுவனங்கள் சுயமான பயிற்சித் திட்டங்களை வைத்திருக்கிறார்கள் அதில் சேர்ந்து பயிலலாம்."

மறக்க முடியா பயிற்சி அனுபவம்?

" மறக்க முடியாத அனுபவங்கள் நிறைய உண்டு. இரண்டு சம்பவங்களை இங்கே நினைவுகூர்கிறேன்.  ஒன்று நான் முதன்முதலாக தனி ஒருத்தியாய், தனியாக விமானத்தை இயக்கிப் பறந்த அனுபவம். அது நான்கு பேர் அமர்ந்து பயணம் செய்யும் விமானம். ஆனால், தனியாக விமானத்தை இயக்கி ப்பயிற்சி செய்ய வேண்டும். எங்களது அந்தப் பயிற்சிக் கல்லூரியில், விமானப் பயிற்சியாளர் இல்லாமல் தனியாகப் பறக்கும் ஒவ்வொரு தருணமும் மிகவும் சுவாரஸ்யமானது. எப்போதும் இனிக்கும் இனிய அனுபவம் அது.

இரண்டாவது அனுபவம்... நான் முதன் முதலாகப் பயணிகளை ஏற்றிக்கொண்டு A320 ஓமன் நாட்டின் மஸ்கட் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது என் வாழ்வின் மறக்க முடியாத அனுபவம்.

'ஏர்பஸ்' விமானத்தைத் தரையிறக்கப் பல நுட்பங்களை நாம் கையாள வேண்டும். எனது தலைமை விமானி நான் சிறப்பாக விமானத்தைத் தரையிறக்கியதாக  என்னை வெகுவாகப் பாராட்டி வாழ்த்துக் கூறினார். பயணிகளை ஏற்றிக்கொண்டு பாதுகாப்பாகத் தரையிறங்கிய அந்த நாள் 21.9.2018.

இன்னொரு அனுபவமும் என் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவாக இன்னும் இருக்கிறது.  அன்று நான் இந்தியாவின் நாக்பூரிலிருந்து  டோஹாவை நோக்கி விமானத்தை இயக்கிக்கொண்டிருக்கிறேன். ஏறக்குறைய 34 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கிறோம். அதே நேரத்தில் 35 ஆயிரம் அடி உயரத்தில் இன்னொரு விமானம் டோஹாவிலிருந்து கோலாலம்பூருக்கு பறந்துகொண்டிருக்கிறது.  அந்த கோலாலம்பூர் விமானத்தில் என் அம்மா, அப்பா, தங்கை, தம்பி அனைவரும் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். விமானத்தில் உள்ள ராடார் கருவி மூலம் அறிந்துகொண்ட நான், என் குடும்பத்தினர் பயணம் செய்யும் விமானத்தை ரிக்கார்டிங் செய்தேன். 35 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு புள்ளியில் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. எவருக்கும் அமைந்திடாத வாய்ப்பு இது. என் வாழ்நாளில் மறக்கவே  முடியாத அனுபவம் இது."

உங்களைப் போன்றே உயரத்தில் கனவை வைத்திருக்கும் நம் நாளையத் தலைமுறைக்கு நீங்கள் சொல்வது என்ன?

"விமானி ஆக வேண்டும் என்ற கனவு, எண்ணம் இருந்தால் தாராளமாக இந்தத் துறையில் ஈடுபடலாம். நிறைய சவால்கள் மிக்கத் துறை என்பதால் தன்னம்பிக்கையும், விடா முயற்சியும், தைரியமும் மிக மிக அதிகம் தேவை. இந்தத் துறையில் ஈடுபட ஆசையும், வெறியும் இருந்தால் எந்தச் சவாலையும் சமாளிக்கும் ஆற்றல் நமக்குத் தானாக வந்து விடும். விமானியாகி ஆகாயத்தில் பறக்கும் போது, நாம் பட்ட துன்பம் எல்லாம் காற்றோடு கரைந்து இன்பத்தில் மூழ்கலாம். ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் இந்தத் துறையை தாராளமாகத் தேர்வு செய்யலாம்!"

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *