ஜேஎஸ்-எஸ்இஜெட் பொருளாதார மண்டலம் ஆரம்பம்-10ஆண்டுகளில் 100 திட்டங்கள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன. 8-

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஜொகூர்- சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டத்தை (ஜேஎஸ்- எஸ்இஎஸ்) மலேசிய மற்றும் சிங்கப்பூர் அரசாங்கங்கள் நேற்று தொடக்கி வைத்தன. வரும் பத்தாண்டுகளில் நூறு திட்டங்களைக் கவர அந்த சிறப்புப் பொருளாதார மண்டலம் உறுதி பூண்டுள்ளது.

ஜேஎஸ்- எஸ்இஎஸ் தற்போது இஸ்கண்டார் மேம்பாட்டுப் பகுதி, ஃபோரஸ்ட் சிட்டி, பெங்கேராங் இண்டர்கிரேட்டட் பெட்ரோலியம் கொம்பிளெக்ஸ் மற்றும் டெசாரு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இதன் மொத்த நிலப் பரப்பளவு 357,128 ஹெக்டர் ஆகும்.




இஸ்கண்டார் மேம்பாட்டுப் பகுதி ஜொகூர் பாரு மாநகர மையம், இஸ்கண்டார் புத்ரி, தஞ்சோங் பெலாப்பாஸ் -தஞ்சோங் பின், பாசிர் கூடாங், செனாய்-ஸ்கூடாய், மற்றும் செடானாக் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது.

விமானத்தொழில், மின்சார, மின்னணுத்தொழில்கள், ரசாயன, மருத்துவக் கருவிகள், மருந்துப் பொருள் தயாரிப்புத் தொழில்கள் போன்ற புதிய துறைகளும் அப்பொருளாதார மண்டலத்தில் இடம்பெற்றிருக்கும். அது தவிர, வர்த்தகச் சேவைகள், இலக்கவியல் பொருளாதாரம், சுகாதாரக் கவனிப்பு, உற்பத்தித்துறை, சுற்றுலா, கல்வி, தளவாடவியல்,எரிபொருள் மற்றும் உணவுப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தொழில்களும் அங்கு இடம்பெறும்.

முதல் ஐந்தாண்டுகளுக்கு ஐம்பது திட்டங்களை விரிவாக்கம் செய்வதற்கு சிங்கப்பூரும் மலேசியாவும் கடப்பாடு கொண்டுள்ளன. பத்தாண்டுகளில் திட்டங்களின் எண்ணிக்கை நூறாக உயரும் என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.

இத்திட்டங்கள் வாயிலாக இருபதாயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இவை மதிப்பு வாய்ந்த திட்டங்கள் என்பதால் மாதாந்திர சம்பளம் ஐயாயிரம் வெள்ளியிலிருந்து ஆறாயிரம் வெள்ளியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.




ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *