டி15 வருமான வரம்பு வெ.13,000க்கும் அதிகமாக இருக்க வேண்டும்-அன்வார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 30-

"டி15" பிரிவில் சேர்க்கப்படுபவர்களின் குடும்ப வருமானம் மாதத்திற்கு பதின்மூன்றாயிரம் வெள்ளியாக இருக்க வேண்டும் என்று புள்ளிவிவரத்துறை பரிந்துரை செய்துள்ளது. ஆனால், அந்த வருமான வரம்பு அதைவிட கூடுதலாக இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்து தெரிவித்துள்ளார்.

"டி15' என்பது அதிக வருமானத்தை ஈட்டும் தரப்பினரைக் குறிக்கும் பிரிவாகும். அந்தப் பிரிவுக்கு வகைப்படுத்தப்படுபவர்களின் குடும்ப வருமானம் குறைந்தபட்சம் பதின்மூன்றாயிரம் வெள்ளியாக இருக்க வேண்டும் என்று புள்ளிவிவரத்துறை பரிந்துரைத்துள்ளது என்று மக்களவையில் அன்வார் குறிப்பிட்டார். ஆயினும், அந்த குறைந்தபட்ச வருமான வரம்பை மேலும் உயர்த்த வேண்டும் என்று அன்வார் கூறினார். புள்ளிவிவரத்துறை நிர்ணயித்துள்ள பதின்மூன்றாயிரம் வெள்ளி வருமான வரம்பு மிகக் குறைவாக உள்ளது. இதனை நாங்கள் மறுசீலனை செய்து வருகிறோம் என்று நிதியமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையற்ற சிரமத்தைக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. எனவே, குறைந்தபட்ச வருமான வரம்பை மேலும் அதிகரிப்பது குறித்து நிதியமைச்சும் பொருளாதார அமைச்சும் திட்டமிட்டு வருகின்றன என்றார் அவர்.ரோன்95 பெட்ரோலுக்கான இலக்கிடப்பட்ட உதவித்தொகை வழங்கப்படும் விவகாரத்தில் "டி15 பிரிவைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றனர் என்று பக்காத்தான் ஹராப்பானின் கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கூ புவே தியோங்கின் கேள்விக்குப் பதிலளித்தபோது அன்வார் இதனைத் தெரிவித்தார்.

இலக்கிடப்பட்ட ரோன் 95 பெட்ரோல் உதவித் தொகைத் திட்டம் அடுத்தாண்டு மத்தியில் நடப்புக்கு வரவுள்ளது. அத்திட்டம் நடப்புக்கு வந்தவுடன் வெளிநாட்டினரும் "டி15' பிரிவைச் சேர்ந்தவர்களும் சந்தை விலைக்கேற்ப கட்டணத்தைச் செலுத்த வேண்டிவரும் என்றார் அன்வார். புதிதாக வரையறுக்கப்பட்டுவரும் "டி15 பிரிவில் உள்ளடக்கப்படவிருப்பவர்களுக்கான பல சலுகைகள் மீட்டுக் கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

தற்போது 5,250 வெள்ளிக்கும் குறைவான மாதாந்திர வருமானம் பெறும் குடும்பத்தினர் "பி40" பிரிவைச் சேர்ந்தவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 5,251 வெள்ளிக்கும் 11,819 வெள்ளிக்கும் இடைப்பட்ட வருமானத்தை ஈட்டும் குடும்பத்தினர் “எம்40" பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் 11,820 வெள்ளிக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டும் குடும்பத்தினர் "டி20” என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.ஆயினும், பெரும் பணக்காரர்களை "டி15” எனும் மற்றொரு பிரிவில் உள்ளடக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு இலக்கிடப்பட்ட ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித்தொகை வழங்கக்கூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *