22 விளையாட்டாளர்களுக்கு வெ. 24,350 ஊக்க வெகுமதி: பேரா மாநில அரசாங்கம் வழங்கியது
- Hisha Thamil
- 10 May, 2024
ஈப்போ, மே 10-
தேசிய, அனைத்துலக நிலையில் மாநிலத்தின் பெயரை மிளிர வைத்த 26 விளையாட்டாளர்களுக்கு மொத்தம் 24,350 வெள்ளியை ஊக்க வெகுமதியாக பேரா மாநில அரசாங்கம் வழங்கி கௌரவித்தது.
திடல் பாவ்லிங், நீச்சல், சதுரங்கம், குத்துச் சண்டை, சைக்கிள், ஒரு கிரிக்கெட் பெண்கள் குழு, டென்பின் பந்து வீச்சு ஆகியப் போட்டியாளர்கள் இந்த வெகுமதியைப் பெற்றதாக பேரா மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஷாராணி முகமட் கூறினார்.
இந்த வெகுமதி வழங்கப்பட்டதன் மூலம் நாட்டைப் பிரதிநிதித்து தேசிய நிலையில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டாளர்களுக்கு மென்மேலும் தன்முனைப்பினை வழங்கும் என தாம் எதிர்பார்ப்பதாக சொன்னார்.
மேலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சிறந்த அடைவு நிலையை வெளிப்படுத்தி மாநிலத்தின் பெயரையும் மிளிர வைத்துள்ள அனைத்து விளையாட்டாளர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.
இதுபோன்ற சிறந்த வெற்றிகளையும் சாதனைகளையும் படைப்பது அவ்வளவு சுலபமானதல்ல. நேர அர்ப்பணிப்பு, முயற்சி, சிறந்த ஒழுக்கம், பெற்றோர், பயிற்றுனர்கள் ஊக்கமளிப்பு, வற்றாத ஆதரவு மிகவும் பலமானதாகும் என பேரா மாநில விளையாட்டு மன்றத்தின் சாதனை வெகுமதி வழங்கும் மற்றும் 100 நாள் தேசிய விளையாட்டு 2024 (சரவாக் சுக்மா) நிகழ்வில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
மேலும் பேசிய அவர், சரவாக்கில் நடைபெறவிருக்கும் சுக்மா போட்டியில் பங்கேற்கவிருக்கும் மாநில அணிகளுக்குத் தன்முனைப்பை வழங்கும் அதே வேளையில், பங்கேற்கும் ஏதேனும் ஓர் அணியைதத்தெடுக்கும் ஆட்சிக்குழுவாக மாநில அரசாங்கம் விளங்கும் என கூறிய அவர், மற்றவைகளை மாநில இலாக்காகள் ஏற்றுக் கொள்ளுமென சொன்னார்.
சுக்மா போட்டியில் பங்கேற்கும் விளையாட்டாளர்கள் மாநிலத்தின் நற்பெயரைக் காக்க வேண்டுமெனவும் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஷாராணி முகமட் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் மாநில அரசாங்க அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *