திமுக அரசுக்கு எதிராக விமர்சனம் செய்ய மாட்டேன்-வைகோ உறுதி!

- Muthu Kumar
- 03 Jul, 2025
திமுக அரசுக்கு எதிராக விமர்சனம் செய்ய மாட்டேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்ட வட்டமாக தெரிவித்தார்.சென் னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்தில் முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன். மதிமுகவில் நடைபெற்று வரும் செயல் வீரர்கள் கூட்டம் தொடர்பாக அவரிடம் தெரிவித்தேன். இந்த திமுக அரசுக்கு எதிராக எந்த பிரச்சினையிலும் ஒரு வார்த்தை கூட நான் விமர்சனமாக வைத்ததில்லை, வைக்கவும் மாட்டேன்.
திமுகவுக்குப் பக்கபலமாக இருப்பேன் என முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி மூச்சுக்குச் சில நாட்களுக்கு முன்பு அவரிடம் கூறினேன். அதை நேற்று முன்தினம் கூட மேடையில் பேசியிருந்தேன் என முதல்வரிடம் தெரிவித்தேன். இந்துத்துவ சனாதன சக்திகள், திராவிட கொள்கைகளைத் தகர்க்கலாம் என நினைத்தால், இமயமலையைக் கூட அசைக்கலாம் திராவிட இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது.
வாஜ்பாய், அத்வானி ஆகியோர் என்னை மத்திய அமைச்சராக்குகிறோம் என்று சொன்னபோது, நான் முடியாது என்று சொன்னேன். என்னை பொறுத்த வரை கொள்கை என்றால் அதில் உறுதியாக இருப்பேன். வரும் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையாக வென்று ஆட்சியைப் பிடிக்கும்.
கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் ஓட்டு இல்லாமல் திமுக எம்எல்ஏ-க்களே ஓட்டு போட்டு முதல்வரை தேர்ந்தெடுக்கும் வகையில் வெற்றி பெறும். கூட்டணி ஆட்சி என்பது எங்களின் நோக்கம் அல்ல. கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எங்களின் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *