நிமோனியா காய்ச்சலால் பேட்மேன் ஹீரோ காலமானார்!

top-news
FREE WEBSITE AD

1959ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி பிறந்த பிரபல ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் பேட்மேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர்.தொண்டை புற்றுநோய் பிரச்னையால் கடந்த சில ஆண்டுகளாகவே போராடி வந்த அவர், நிமோனியா காய்ச்சல் காரணமாக ஏப்ரல் 1ம் தேதி காலமானார். அவரது வயது 65.

பிரபல ஹாலிவுட் நடிகர் வால் கில்மரின் மறைவு ஹாலிவுட் திரையுலகை சோக கடலில் ஆழ்த்தியுள்ளது. சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.தொடர்ச்சியாக சினிமா பிரபலங்கள் இயற்கை மரணங்களை சந்திக்காமல் உடல்நலக்குறைவு காரணமாக குறைவான வயதிலேயே உயிரிழந்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

1984ம் ஆண்டு வெளியான டாப் சீக்ரெட் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் நடிகராக அறிமுகமானவர் தான் வால் கில்மர். டாப் கன், கில் மி அகைன், தி டோர்ஸ், டாம்ப்ஸ்டோன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர், 1995ம் ஆண்டு வெளியான பேட்மேன் ஃபாரெவர் படத்தில் பேட்மேனாக நடித்து அசத்தினார். ரெட் பிளானட், வொண்டர்லேண்ட், ஸ்பார்டன், அலெக்ஸாண்டர், லவ் குரு, தி ஸ்னோமேன், டாப் கன் மேவரிக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான டாப் கன் மேவரிக் படத்துக்கு பிறகு இவர் சினிமாவில் நடிக்கவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வெடுக்க ஆரம்பித்துவிட்டார்.

தொண்டை புற்றுநோய் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பெரும் போராட்டத்தை நடத்தி வந்த வால் கில்மர் சமீபத்தில் நிமோனியா காய்ச்சல் பாதிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 1ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு ஹாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1988ம் ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகை ஜோனே வேலி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 1996ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த தம்பதியினருக்கு மெர்சிடஸ் என்கிற மகளும், ஜேக் கில்லர் என்கிற மகனும் உள்ளனர்.

ஜேக் கில்லர் ஹாலிவுட் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மனைவியை விவாகரத்து செய்த பிறகு சில நடிகைகளுடன் டேட்டிங் செய்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், அதன் பின்னர் யாரையும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பேட்மேன் படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்ற வால் கிம்மரின் மறைவு செய்தியை அறிந்த ஏராளமான ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *