கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலர் சரிவு!

- Muthu Kumar
- 02 Jul, 2025
அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் சரிவை கண்டிருக்கிறது.இந்த சரிவுக்கு டிரம்பின் தவறான பொருளாதார கொள்கைள்தான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
கடைசியாக கடந்த 1973ம் ஆண்டு இதுபோன்று டாலரின் விலை சரிவை கண்டது. இப்போது டாலர் இந்த அளவுக்கு சரிய காரணம் அந்நாட்டின் பொருளாதார கொள்கைகள்தான் என்று நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மற்ற நாடுகளுடன் வர்த்தகத்தில் கடுமையான வரிகளை விதித்தது மற்றும் உலக விஷயங்களில் இருந்து விலகி தனிமைப்படுத்தும் கொள்கைகளை பின்பற்றியதான் இதற்கான காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்புகள், பணவீக்கம் பற்றிய கவலைகளை அதிகரிக்க செய்திருக்கிறது. அதுமட்டுமல்லாது அமெரிக்க அரசாங்கத்தின் கடன் அதிகரிப்பு ஆகியவை டாலரின் மதிப்பை மேலும் பாதித்துள்ளன. இதனால் அமெரிக்கர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அதிக செலவாகிறது. அதே நேரத்தில், வெளிநாட்டினர் அமெரிக்காவில் முதலீடு செய்ய யோசிக்கின்றனர்.
டிரம்ப் நிர்வாகம் ஆரம்பத்தில் வரி கொள்கைகளை கடுமையாக்கியதால் பொருளாதாரத்தில் குழப்பம் ஏற்பட்டது. பங்குச் சந்தை மற்றும் பத்திர சந்தைகளில் நிலைத்தன்மை குறைந்தது. பணவீக்கம் மற்றும் அதிக வட்டி பொருளாதாரத்தை மேலும் பாதிக்குமா என்ற கவலையில் முதலீட்டாளர்கள் இருந்தனர். எனவே முதலீடுகள் அமெரிக்காவுக்குள் நுழைய பயந்தன.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்றார். அப்போது கூட எல்லாம் சரியாகத்தான் இருந்தது. டாலரின் மதிப்பு உச்சத்தில் இருந்தது. ஆனால், அவர் அமல்படுத்திய சில பொருளாதார கொள்கைகள், அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை குறைத்தது. டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், வர்த்தகம் செய்ய ஏற்றது என்கிற நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தது. அவரது கொள்கைகளால் வரிகள் அதிகமாக்கப்பட்டன. எனவே பணவீக்கம் உச்சத்தை தொட்டது.
பிரச்சனை கையை மீறி போகிறது என்பதை டிரம்ப் ஒரு கட்டத்தில் உணர்ந்திருந்தார். எனவே நிலைமையை கட்டுப்படுத்த சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். விளைவாக அமெரிக்க பங்குச் சந்தைகள் மற்றும் பத்திர சந்தைகள் மீண்டும் வளர்ச்சியை கண்டன. ஆனால், டாலர் மட்டும் அப்படியே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது.
இது குறித்து ஸ்டீவ் இங்கிலேண்டர் கூறுகையில், "உலக நாடுகள் உங்கள் கொள்கைகளை எப்படி பார்க்கின்றன என்பதே முக்கியம்" என்று தெரிவித்திருக்கிறது.
டாலர் வீழ்ச்சி என்பது சாதாரண பிரச்சனை அல்ல. டாலர் என்பது அதிகாரம். அமெரிக்கா இத்தனை ஆண்டுகளாக மற்ற நாடுகள் மீது செலுத்தி வரும் பொருளாதார ஆதிக்கம். இந்த டாலர் ஆட்டம் காண்பதால் அமெரிக்காவின் பொருளாதாரமும் சரிவடையும். அரசின் கடன் அதிகரிக்கும். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கத்தான் மாற்றும்.
கடைசியாக இது டாலர் என்கிற ஒன்றை இல்லாமல் செய்துவிடும். ஆனால் இது நடக்க இன்னும் நீண்ட காலம் இருக்கிறது. இருப்பினும் இடையில் ஏற்பட்டிருக்கும் இதுபோன்ற நெருக்கடிகள் அந்நாட்டு அரசுக்கு தலைவலியாக நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபராக வந்த டிரம்ப், அமெரிக்காவுக்கு மற்ற நாடுகள் அதிக வரியை விதிக்கிறது என்றும், எனவே அந்த நாடுகளுக்கு நாங்களும் கூடுதல் வரியை விதிக்கிறோம் என்று அறிவித்தார். கேட்பதற்கு மேலோட்டமாக இது நியானமான வாதமாக தெரிந்தாலும், இது மிகபபெரிய தவறான நடவடிக்கை என்று காலப்போக்கில் அமெரிக்கா உணர்ந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *