சிலாங்கூர் மாநில 240 தோட்டத் தொழிலாளர்களுக்கு 7 கோடியே 50 லட்சம் வெள்ளி செலவில் சொந்த வீடுகள்!
- Muthu Kumar
- 30 Oct, 2024
(கு.தேவேந்திரன்)
கோலாலம்பூர், அக். 30-
சிலாங்கூர் மாநிலத்தில் 240 தோட்டத் தொழிலாளர்களுக்கு 7 கோடியே 50 லட்சம் வெள்ளி செலவில் சொந்த வீடுகள் கட்டித்தரப்படும். இது இந்தியர்களுக்கான தீபாவளிப் பரிசு என்று வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.மடானி அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என ஙா கூறினார்.
நேற்று தலைநகர் பங்சாரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் தமிழ் ஊடகவியலாளர்களுடனான தீபாவளி மதிய உணவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.நடந்து முடிந்த கேகேபி இடைத்தேர்தலின்போது தோட்டத் தொழிலாளர்கள் சொந்த வீடு வேண்டும் என்ற
கோரிக்கையை வைத்தனர். அது மட்டுமல்ல. என் அலுவலகத்தில் மூன்று முறை கோரிக்கை மனு வைத்தனர்.
இவர்களின் கோரிக்கையை ஏற்று 240 தொழிலாளர்களுக்கும் சொந்தமாக வீடுகள் கட்டித்தரப்படும் என்று அரசாங்கம் வாக்குறுதியளித்தது.இந்த வாக்குறுதியை, இந்த தீபாவளி நன்னாளில் தீபாவளிப் பரிசாக தொழிலாளர்களுக்கு அறிவிப்பதில் நாங்கள் பெருமை கொள்கின்றோம் என்று ஙா கோர் மிங் சொன்னார்.
டத்தோஸ்ரீ அன்வாரின் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.அது மட்டுமல்ல, 60 ஆண்டு காலம் மஇகா செய்யாததை நாங்கள் செய்திருக்கின்றோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பாக பேராக் மாநிலத்தில் எத்தனையோ நலத்திட்ட உதவிகளைச் செய்திருக்கின்றோம். தமிழ்ப்பள்ளிகள், இந்திய கிராமங்கள் ஆகியவற்றிற்கு நாங்கள் உதவிகளைச் செய்து வருகிறோம்.தமிழ்ப்பள்ளிகளைப் பொறுத்தவரை லட்சக்கணக்கான வெள்ளிகளை வழங்கியிருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
நாங்கள் எத்தனையோ சேவைகளையும் உதவிகளையும் செய்து வருகிறோம். ஆனால் ஒரு தமிழ்ப்பத்திரிகை (தமிழ்மலர் அல்ல) தவறான தகவல்களை வழங்கி வருகிறது. உண்மை தெரியாமல் எழுதி வருவதாக ஙா கூறினார்.மக்களுக்கு நிறைவான சேவைகளை மடானி அரசாங்கம் செய்து வருகிறது. எங்களின் இந்த சேவையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உண்டு.
எல்லா இனத்தவர்களும் என் குழந்தைகள் என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறி வருகிறார். இதுதான், இந்தக் கொள்கையைத்தான் அவர் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார். அதன்படியே நடக்கிறார் என்பதை நாம் காணமுடியும். தீபத் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என ஙா கோர் மிங் கூறினார்.
இந்த தீபாவளி மதிய உணவு நிகழ்ச்சியில் அமைச்சர் ஙா கோர் மிங்குடன் தமிழ் மலர் தலைமை ஆசிரியர் கு.தேவேந்திரன், நிருபர் இரா.கோபி, அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *