வர்த்தகத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்த பிட்காயின்!

- Muthu Kumar
- 21 Dec, 2024
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயின் இன்றைய வர்த்தகத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்ததுள்ளது.
கடந்த சில வாரங்களாக 1 லட்சம் டாலருக்கும் அதிகமான தொகைக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வந்த பிட்காயின் இன்று 92,292 டாலர்களுக்கு விலை குறைந்தது.இந்த கூர்மையான வீழ்ச்சிக்கு அமெரிக்க ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை அறிவிப்பு முக்கிய காரணமாக அமைந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் டொனால்டு டிரம்ப் வழக்கம் போல் தேவையில்லாமல் பேசியதை அமெரிக்க ரிசர்வ் வங்கி கடுமையாக மறுத்துள்ளது மூலம் முதலீட்டாளர்களுக்கு கிரிப்டோகரன்சி மீதான நம்பிக்கை குறைந்துள்ளதை காட்டுகிறது.
அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர் ஜெரோம் பவுவெல் தலைமையிலான FOMC கூட்டத்தில் எதிர்பார்த்தபடி அந்நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இருப்பினும், எதிர்கால வட்டி விகிதக் குறைப்புகள் குறித்த பெடரல் ரிசர்வ்-ன் கணிப்புகள் முதலீட்டு சந்தையை பாதித்தது.பெடரல் ரிசர்வ்-ன் இந்த கடுமையான நிலைப்பாடு பங்குச்சந்தை, தங்கம் மட்டும் அல்லாமல் பிட்காயின் உட்பட கிரிப்டோகரன்சிகளையும் பாதித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு 108,309 டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியதை தொடர்ந்து பிட்காயின் விலையில் இன்று 92,292 டாலராக குறைந்துள்ளது. பிட்காயின் மதிப்பு உயர டொனால்டு டிரம்ப் பேச்சு முக்கிய காரணமாக அமைந்தது.அதேபோல் பிட்காயின் மதிப்பு சரிய பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல்-ன் பேச்சு முக்கிய காரணமாக உள்ளது.
டொனால்டு டிரம்ப் கடந்த ஆட்சியின் போதே தேவையில்லாமல் பல முறை பேசி மாட்டிக்கொண்டது நினைவிருக்கும். இந்த முறை அதிபர் தேர்தலில் வெற்ற பெற்றதில் இருந்து பல அதிரடி கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
இப்படி அவர் பேசிய பேச்சு தான் பிட்காயின் 90000 டாலரில் இருந்து 108,309 டாலர் வரை உயர காரணமாக இருந்தது.டொனால்டு டிரம்ப் கிரிப்டோ ஆதரவாளர் என்பது அனைவருக்கும் தெரியும், இந்த நிலையில் டிரம்ப் கடந்த வாரம், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, அமெரிக்கா எப்படி தனது எண்ணெய் தேவைக்காக பல இடத்தில் இருந்து திரட்டி எண்ணெய் இருப்பு சேமிக்கிறதோ, இதேபோன்று டிஜிட்டல் நாணயம் அதாவது கிரிப்டோகரன்சி தேசிய கையிருப்பை உருவாக்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார். இதுக்குறித்து மீண்டும் ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிவித்தார் டிரம்ப், இந்த தகவல் வெளியான பின்பு தான் பிட்காயின் 108,309 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது.
இந்த வாரம் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் புதன்கிழமை, அமெரிக்க மத்திய வங்கி பிட்காயினை சேமித்து வைப்பதற்கான எந்தவொரு அரசு முயற்சியிலும் ஈடுபட விரும்பவில்லை என்று தெளிவுபடுத்தினார். "மத்திய வங்கிகள் பிட்காயின் வைத்திருக்க அனுமதிக்கப்படுவது இல்லை," என்று பவல் இரண்டு நாள் நாணய கொள்கைக் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார். இதனால் கடந்த 2 நாட்களாக பிட்காயின் மதிப்பு தாறுமாறாக குறைந்து வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *