மலேசியாவைச் சேர்ந்த ஆறு கைதிகள் மோசமாக நடத்தப்படவில்லை-தாய்லாந்து சிறைச்சாலை!
- Muthu Kumar
- 11 Nov, 2024
நராதிவாட், நவ. 11-
மலேசியாவைச் சேர்ந்த ஆறு கைதிகள் மோசமாக நடத்தப்பட்டதாகக் கூறப்படுவதை தாய்லாந்தின் நராதிவாட் பிரதேச சிறைச்சாலை அதிகாரிகள் மறுத்தனர்.இதர முஸ்லிம் கைதிகளைப் போன்றே அவர்களும் முறையாக நடத்தப்பட்டனர். முஸ்லிம்களால் தயாரிக்கப்பட்ட மூன்று வேளை ஹலால் உணவு நாள்தோறும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தொழுகை நடத்துவதற்கும் அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு விட்டது என்று நராதிவாட் சிறைச்சாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். முஸ்லிம் பெண் கைதிகளைப் பொறுத்தமட்டில், அவர்கள் தலையங்கி அணிவதற்கும் முழுநீள ஆடையும் அணிவதற்கு அனுமதிக்கப்பட்டனர் என்றார்.
தாய்லாந்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மலேசியாவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைத்து கைதிகளும் சமமாகத்தான் நடத்தப்பட்டனர். ஒவ்வொரு கைதியும் மோசமாகவும் கொடூரமாகவும் நடத்தப்பட்டனர் என்று கூறப்படுவது முற்றிலும் தவறாகும் என்று அப்பேச்சாளர் சொன்னார்.மலேசியாவைச் சேர்ந்த ஆறு கைதிகளும் தற்காலிக காவல் அறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நல்ல உடல்நலத்துடன் உள்ளனர். இதர கைதிகளைப் போன்று நாள்தோறும் தத்தம் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யும் பட்சத்தில், வாரத்திற்கு ஒருமுறை கைதிகளைச் சந்திக்க அவர்களின் குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்கப்படும் என்றார்.
கிளந்தானைச் சேர்ந்த பிரபல பாடகர் ஒருவர் உட்பட ஆறு மலேசியர்கள் இம்மாத முற்பகுதியில் சுங்கை கோலோக் அருகே உள்ள தங்கும் விடுதியொன்றில் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தாய்லாந்து போலீசாரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 25 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *