உலகளவில் தொழில் தொடங்க தமிழர்களுக்கு அழைப்பு!
- Muthu Kumar
- 17 Nov, 2024
(கு.தேவேந்திரன்)
கோலாலம்பூர், நவ. 17-
தலைநகர் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நேற்று இரண்டாவது நாளாக 11ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டுக்கு, மாநாட்டுத் தலைவரும் வழக்கறிஞருமான முனைவர் வி.ஆர்.எஸ்.சம்பத் தலைமையேற்று நடத்தினார். நேற்றைய நிகழ்ச்சியில் இங்கிலாந்து, லண்டனைச் சேர்ந்த தொழில் முனைவோர் டாக்டர் அப்துல் பஷிட் ஸாஹிட், தமிழ்நாட்டின் சிறுதொழில் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் டி.பி.யாதவ் ஐஏஎஸ், சென்னையைச் சேர்ந்த ஹென்றி ஆறுமுகம் ஆகியோர் உரையாற்றினர்.
அனைத்துலக அளவில் பொருளாதார மேம்பாட்டுக்கான ஆரம்பநிலை குறித்த சட்டம், சட்டவிதிகள் குறித்து தமிழ்நாட்டின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் ஆர்.விடுதலை, சிங்கப்பூர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.ரவீந்திரன், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டாக்டர் ஏ.தியாகராஜன், வழக்கறிஞர் டாக்டர் ஆர்.மீனாட்சி சுந்தரம் ஆகியோர் உரையாற்றினர். அதன் பிறகு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் விவசாயத் துறை முன்னாள் துணையமைச்சருமான டான்ஸ்ரீ டாக்டர் டி.மாரிமுத்து தலைமையில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த தொழில்துறை பேச்சாளர்கள் உரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாக இயக்குநரும் 11ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர்களில் ஒருவருமான டத்தோ பா.சகாதேவன்,தமிழ்நாட்டின் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு பாஜக மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் பேராசிரியர் டாக்டர் ஏ.முத்துமாணிக்கம், விஜிபி தங்கக்கடற்கரை நிறுவனர் விஜிபி சந்தோஷம் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *