டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் சர்ச்சை பாடல் வரிகள் நீக்கம்-டியூனும் மியூட்!

top-news
FREE WEBSITE AD

நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில், 'கோவிந்தா கோவிந்தா பாடலில் இடம் பெற்றிருந்த சர்ச்சை வரிகளை நீக்கியுள்ளதாகவும், டியூனை மியூட் செய்ய உள்ளதாகவும் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.

நடிகர் சந்தானம் நடித்துள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள, 'கோவிந்தா கோவிந்தா பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

இந்த பாடல், திருப்பதி வெங்கடேச பெருமாளை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி.பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.அவர் தனது மனுவில், பக்தி பாடலின் வரிகளை மாற்றி, படத்துக்கு சம்பந்தமில்லாமல், வெங்கடேஸ்வரரை அவமதிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மதத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ள இந்த பாடலை நீக்கும்படி கூறாமல், திரைப்படத்துக்கு தணிக்கை குழு சார்பில், யு/ஏ சான்று வழங்கப்பட்டுள்ளதால், சென்சார் சான்றை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த பாடலுடன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். பாடலை நீக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, படத் தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில், குறிப்பிட்ட பாடலில், ஆட்சேபம் தெரிவித்த வரிகள் நீக்கப்பட்டு, பாடல் மாற்றியமைக்கப்பட்டு, புதிய சென்சார் சான்று பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், இருந்தாலும், பாடலின் டியூன் பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இதுபோல டியூனை பயன்படுத்த வேண்டும் என ஏன் தோன்றியது? மற்ற மதங்களைப் பற்றி இதுபோல பாடல் பயன்படுத்த தைரியம் உள்ளதா? எந்த மதங்களுக்கும் அவதூறு ஏற்படுத்த அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், டியூனை மியூட் செய்வது குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க பட தயாரிப்பு நிறுவனங்கள் தரப்புக்கு அறிவுறுத்தினர்.

அதன்படி விளக்கம் பெற்ற பட தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர், பாடல் டியூன் மியூட் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், திரைப்படத்தை வெளியிட தடை இல்லை எனக் கூறி நாளை விரிவான உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி, விசாரணையை தள்ளி வைத்தனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *