டோனி பெர்னாண்டஸ் - எளிய மக்களுக்கும் சிறகுகள் தந்தவர்!
- Shan Siva
- 09 Jul, 2024
(சண்.சிவா)
டோனி பெர்னாண்டஸ்
இந்தப் பெயர் இப்போது உலகம் முழுக்க உச்சரிக்கப்படுகிறது.
விருதுகள் தோறும் பரிசீலிக்கப்படுகிறது.
உலகம் சுற்றிப் பார்க்க விரும்பிய எளிய மனிதர்களுக்கும் சிறகுகள் கொடுத்து ஆச்சரியம் காட்டியவர்.
மலிவான சேவையில் விமானம் இயங்கலாம் என்ற விந்தையை நிகழ்த்தியவர்.
'Now everyone can fly' - 'இப்போது யாவரும் பறக்கலாம்' என ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாக இருந்த வான்வெளிப் பயணத்தை எட்டிப் பறித்து எளிதாய் சுவைக்க வைத்து, உலகை அள்ளி ருசிக்க வைத்தவர்.
இன்று ஆசியா இவரின் ஆச்சரியப் பாதையை வியப்போடு பார்க்கிறது. மலேசியா இவரின் மகத்தான முன்னேற்றத்தைத் தட்டிக் கொடுக்கிறது.
இந்திய சமுதாயத்தின் நட்சத்திரமாய்.... மலேசிய வர்த்தகத்தின் உலக பிம்பமாய், வானில் தன் கனவை அறுவடை செய்யும் இவரைத்தான் 'பைத்தியக்காரன்' என்று பல்லிளித்தது சில கூட்டம். 'புத்தி கெட்டவன்: என்று புறம் பேசியது சில வாய்கள்.
'வீட்டை அடமானம் வைத்து திவால் ஆன ஒரு நிறுவனத்தை மீட்கப் போகிறானாம்' எனக் கேலி செய்தனர் சிலர்
ஆனால், எல்லா விமர்சனங்களையும் உரமாக்கித் தரமாய் சம்பவம் செய்தார் டோனி பெர்னாண்டஸ்.
உயரத்தில் லட்சியம்!
லண்டனில் பொருளாதாரப் பள்ளியில் பயின்றவர் டோனி பெர்னாண்டஸ். உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான சர் ரிச்சர்ட் பிரான்சனுக்குச் சொந்தமான 'விர்ஜின்: இசைத்தட்டு நிறுவனத்தில் நிதித்துறை தணிக்கையாளராகப் பணிபுரிந்து, பின்னர் 'வார்னர்' இசைக் குழுமத்தில் தென்கிழக்காசயாவின் துணைத் தலைவராகப் பதவி வகித்தார். இங்கிலாந்தின உயரிய கணக்காயர் பட்டயத்தையும் பெற்று கசடறக் கற்றதை நிரூபித்தார்.
ஆனாலும், அவர் லட்சியத்திற்கு இப்போது சிறகு முளைக்கத் தொடங்கியது.... வானில் மிக உயரத்தில் தன் லட்சியத்தை வைத்து அண்ணாந்து பார்த்தார்....
தனது தேசமான மலேசியாவில் ஒரு மலிவுவிலை விமானச் சேவையைத் தொடங்க வேண்டும் என்ற தீரா வேட்கையில் மலேசியா திரும்பினார்.
வானில் பாதை அமைக்கும் தனது கனவு திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியைத் தொடங்கினார்.
நிராகரிப்பு!
மலிவு விலையில் விமானச் சேவை அதற்கு நமக்கு விமானம் தேவை... என்ன செய்யலாம்? என யோசித்தவர், அரசின் உதவியை நாடுவதற்கான முயற்சிகளில் இறங்கினார். பல்வேறு வழிகளில் முயற்சி செய்தார் முடியவில்லை.
அந்த நேரத்தில் அரசுக்குச் சொந்தமான 'ஏர் ஆசியா' நிறுவனம்வேறு திவாலாகி நஷ்டத்தில் முடங்கிக் கிடந்தது.
அது 2001 ஆம் ஆண்டு. அவ்வளவுதான் 'ஏர் ஆசியா' என அரசாங்கம் யோசித்த சமயம்....
அந்த நேரத்தில், மலிவு விலை விமானச் சேவைக்கு உரிமம் கேட்டு மலேசிய அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்தார். அரசிடம் உரிய பதில் இல்லை. மாறாக அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
தளரவில்லை அவர். எத்தனை தடைகள் வந்தாலும் தன் தடத்தைப் பதிப்பதில் உறுதியாக இருந்தார்.
அப்போதைய பிரதமர் துன் மகாதீரைச் சந்திக்க அனுமதி கேட்டார். அப்போதும் நிராகரிக்கப்பட்டார்.
ஐந்து நிமிட அலட்சியம்!
அந்தச் சமயத்தில் மலேசிய உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் துறை அமைச்சின் பொதுச் செயலாளராக இருந்த டத்தோ பாமின் ரெஜாப் என்பவரின் நட்பு இவருக்கு நம்பிக்கை கொடுத்தது.
அந்த நம்பிக்கையின் வெகுமதியாய் பிரதமர் மகாதீரைச் சந்திக்கும் வாய்ப்பும் அமைந்தது. கிடைத்த வாய்ப்பில் தன் திட்டத்தை சிறப்பாக விளக்கிட வேண்டும் என்று துடிப்பாய் இருந்தார். ஆனால், வெறும் ஐந்தே நிமிடங்களில் அந்தச் சந்திப்பு நிறைவுற்றது. அவ்வளவுதான் மகாதீர் பெர்னாண்டஸுக்குச் செலவழித்த நேரம்.
ஆனால், அந்த ஐந்து நிமிடச் சந்திப்பிலும் , தனக்கான விதையை ஆழமாய் ஊன்றி நம்பிக்கையோடு வீடு திரும்பினார் ஃபெர்னாண்டஸ்.
அந்தச் சந்திப்பில் "புதிதாக ஏன் ஒரு விமானச் சேவை? முடிந்தால் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் 'ஏர் ஆசியா' விமானச் சேவையை எடுத்து நடத்திப் பாருங்கள்" என்று ஐந்தே நிமிடங்களில் பேசி ஃபெர்னாண்டஸை அனுப்பி வைத்தார் மகாதீர்.
மகாதீரின் அந்த அலட்சியத்திற்குத் தெரியாது, நாளை இந்த உலகையே அசத்தும் அளவுக்கு 'ஏர் ஆசியா' விண்ணில் பறக்கும் என்று.
லட்சியப் பறவை!!
அரசே புறந்தள்ளிய ஒரு நிறுவனம். நஷ்டமாகி அபாயத்தில் இருக்கிறது... இந்த யானையைக் கட்டி நம்மால் தீனிபோட முடியுமா? என்ற அச்சம் கொஞ்சமும் இல்லாமல், விமானச் சேவை உலகில் தன் பயணத்தைத் தொடங்கினார் டோனி ஃபெர்னாண்டஸ்.
40 மில்லியன் கடன் சுமையில், அப்போது 'ஏர் ஆசியா' இருந்தது. 737-300 ரக போயிங் விமானங்கள் இரண்டு மட்டுமே சேவையில் இருந்தன. எதையும் கணக்குப் பார்க்கவில்லை. துணிச்சலாகக் களம் இறங்கினார்.
'ஏர் ஆசியா' எனும் தன் லட்சியப் பறவைக்கு புதிய இறக்கைகள் கொடுத்து உத்வேகம் ஊட்டினார்.
பறக்கத் தொடங்கியது 'ஏர் ஆசியா'. தன் எஜமானரின் புதிய ஊட்டச்சத்து உற்சாகம் கொடுக்க, உலகின் பக்கம் தன் சிறகை புதியதாய் விரித்தது 'ஏர் ஆசியா'.
அதன்பிறகு எல்லாம் வெற்றிப் பாதையாய் அமைந்தன.
மந்திரச் சொல்!
தற்போது 'கேபிடல் A' என கிரீடம் சூடி, அதன் தலைமைச் செயல்முறை அதிகாரியாக டோனி ஃபெர்னாண்டஸும், நிர்வாகத் தலைவராக கமாருடின் மெரனுனும் இணைந்து வெற்றிப் பாதையில் ' ஏர் ஆசியா'வின் பயணத்தை வடிவமைத்துக்கொண்டிருக்கின்றனர்.
மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், கம்போடியா ஆகிய நாடுகளில் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 21,000 ஊழியர்களுடன் சாதனை சொல்லிப் பறக்கின்றன 'ஏர் ஆசியா' பறவைகள்.
'தாய் ஏர் ஆசியா' (Thai AirAsia), 'இந்தோனேசியா ஏர் ஆசியா' (Indonesia AirAsia) என இரு நிறுவனங்களாகவும் தன் பரப்பை விரித்துள்ளன.
மலிவான கட்டணம், சிறப்பான அணுகுமுறை போன்ற சிறப்பம்சங்களும் 'ஏர் ஆசியா'வின் செயல்பாட்டிற்கு அடித்தளமாக உள்ளன.
AirAsia அதன் நெட்வொர்க்கில், 130 இடங்களுக்கு 800 மில்லியனுக்கும் அதிகமான விருந்தினர்களைக் கொண்டு சென்றுள்ளது. ஏழை எளியோர் என அனைத்து தரப்பினரும் பயணம் செய்ய வேண்டும் எனும் சேவை நோக்கத்துடன், மக்களையும் இடங்களையும் இணைத்துள்ளது. மேலும் 'இப்போது அனைவரும் பறக்க முடியும்' என்ற மந்திரச் சொல்லால், மக்களின் மனம் கவர்ந்த நிறுவனமாக முத்திரை பதித்துள்ளது. உலகம் முழுக்க எண்ணற்ற விருதுகளை வாங்கி குவித்துள்ளது. அண்மையில் கூட லண்டனில் நடைபெற்ற 'Skytrax World Airline Awards 2024' விருது நிகழ்வில், சாதனை விருது பெற்று உச்சம் தொட்டிருக்கிறது 'ஏர் ஆசியா'.
உதாரண நாயகன்!
உள்நாட்டு விமானச் சேவையாக இருந்த "ஏர் ஆசியா'வின் பயணத் தடத்தை, அனைத்துலக விமானச் சேவையாக மாற்றிய பெருமையும் இவரையே சாரும். அதற்கு முன்னர் ஆசிய பிராந்தியத்தில் 'Open-Skies' எனப்படும் திறந்த நிலை வான்வெளி ஒப்பந்தங்கள் இல்லை. ஆனால், இந்த ஒப்பந்தம் அமைவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் டோனி ஃபெர்னாண்டஸ். அதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டார்.
தன் கடின உழைப்பாலும், சரியான திட்டமிடல் கொள்கையாலும் மாபெரும் கனவை நனவாக்கி இன்று உலக பணக்காரர் பட்டியலில் இடிம்பிடித்துள்ளார். பல நாடுகளின் மலிவு விலை விமானச் சேவைக்கு உதாரண நாயகனாய் திகழ்கிறார்.
வெறும் 200 ஊழியர்களை மட்டுமே வைத்துக்கொண்டு, அபாயக் கட்டத்தில் இருந்த ஒரு நிறுவனத்தை வாங்கி, அதில் ஆக்சிஜனாய் தங்கள் கடின உழைப்பைக் கொடுத்து, இன்று 'ஏர் ஆசியா'வை ஆசியாவிலேயே நான்காவது பெரிய நிறுவனமாக மாற்றிய இந்த முயற்சி, ஒரு சாதனை இந்தியரின் சரித்திரப் பக்கமாய், மலேசிய வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *