சுந்தர் பிச்சைக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறிய கூகுள் குரோம்!
- Muthu Kumar
- 20 Nov, 2024
கூகுள் நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தொடர்ந்து புதிய தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் புதிய சேவைகள் அறிமுகம் செய்து வருகிறது.இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் கூகுள் குரோம் பிரவுசருக்கு (Google Chrome) ஒரு மிகப் பெரிய சிக்கல் வந்துள்ளது. இது குறித்த தகவல்களை விரிவாக இங்கே பார்க்கலாம்.
மக்கள் ஸ்மார்ட்போன், கணினி, லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களில் பெரிதும் பயன்படுத்துவது இந்த கூகுள் குரோம் இன்டர்நெட் பிரவுசரை தான். இந்நிலையில் கூகுள் குரோம் பிரவுசரை விற்பனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது கூகுள் நிறுவனம் சட்டவிரோதமாகத் தேடல் சந்தையை குரோம் பிரவுசர் மூலம் ஏகபோகமாக்கியது என கடந்த மாதம் அமெரிக்க நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.
இந்நிலையில் அந்த நீதிபதியின் மூலமாகவே கூகுள் குரோம் பிரவுசரை விற்பனை செய்ய சொல்ல வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறை அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் சட்ட சிக்கல்களை எல்லாம் கடந்து இந்த விவகாரத்தில் தீவிரமான நடவடிக்கையை அரசு தரப்பு மேற்கொள்ள முயல்வதாகக் கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதனால் பயனர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களாக அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது கூகுள் குரோம் பிரச்சனை சுந்தர் பிச்சை-க்கு மிகப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. குறிப்பாக கடந்த 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்து, கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவையின் உருவாக்கத்திற்கும் முன்னேற்றத்துக்கும் பெரும் பங்கு வகித்தார் சுந்தர் பிச்சை.
குறிப்பாக குரோம் பிரவுசரை வைத்திருப்பது கூகுளின் விளம்பர வணிகத்திற்கு முக்கியமானது. எனவே தான் இந்த குரோம் பிரவுசரில் அவ்வப்போது புதிய அம்சங்களையும் கொண்டுவருகிறது கூகுள் நிறுவனம்.மேலும் கூகுள் குரோம் உலகின் மிகவும் பிரபலமான பிரவுசராக இருக்கும் காரணத்தால் அமெரிக்காவில் மட்டும் சுமார் 61% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சில வாரங்களுக்கு முன்பு, இந்தியாவின் CERT-In குழு வெளியிட்டுள்ள தகவலில் மிகவும் மோசமான மற்றும் பாதுகாப்பற்ற பிழை கூகுள் குரோம் வெப் பிரவுசர் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த பிழை ஹேக்கர்களால் (Hackers) எளிமையாக உங்கள் கூகுள் குரோம் பயன்படுத்தப்படும் சாதனங்களுக்கும் நுழைய வழிவகுக்கிறது என்று CERT-In குழு தெரிவித்துள்ளது.
ஹேக்கர்களால் உருவாக்கப்பட்ட இந்த பிழை உங்கள் சாதனங்களைத் தாக்கினால், உங்கள் தகவல்கள் அனைத்தையும் இழக்கும் நிலை (data loss and data theft) நேரிடலாம் என்று கூறப்பட்டது. இந்த மோசமான பிழை முந்தைய கூகுள் குரோம் வெர்ஷன் 130.0.6723.116 மற்றும் லினக்ஸ் தளங்களில் காணப்படுகிறது. அதேபோல், விண்டோஸ் மற்றும் மேக் கூகுள் குரோம் பயனர்களின் கூகுள் குரோம் வெர்ஷன் 130.0.6723.116/.117 மற்றும் இதற்கு முந்தைய வெர்ஷனில் இயங்கும் சாதனங்கள் இந்த பாதிப்பிற்கு உள்ளாகலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே ஹேக்கர்களிடம் இருந்து உங்கள் சாதனங்களைப் பாதுகாக்க குரோம் பிரவுசரை அப்டேட் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக புதிய வெர்ஷன் கூகுள் குரோம் வெப் பிரவுசரில் இருந்து இந்த பிழை நீக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க அப்டேட் செய்வது மட்டுமே ஒரே வழி என்று CERT-In குழு தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *