பள்ளி வாரியத் தலைவருக்கு பிறந்த நாள் சிறப்பு உபசரிப்பு!
- Shan Siva
- 16 May, 2024
கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் தின விழா பள்ளி மண்டபத்தில்
நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. ‘திறன்மிகு இலக்கவியல் ஆசிரியரே… மேன்மைமிகு
நாட்டின் எதிர்பார்ப்பு’ எனும் கருப்பொருளில் நடைபெற்ற இவ்விழாவில்
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் படைப்புகள் வழி விழாவை மெருகூட்டினர்.
நிகழ்வின் இன்னொரு அங்கமாக அப்பள்ளியின் வாரியத் தலைவரும், ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத் தோற்றுநருமான ஓம்ஸ் பா,தியாகராஜன் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு உபசரிப்பும் பள்ளி வாரியத்தின் சார்பில் நடைபெற்றது. தலைமையாசிரியர் செல்வநாதன் வழிகாட்டுதலில் ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் இதில் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய ஓம்ஸ் பா.தியாகராஜன் , “ஆசிரியர் தினத்தை நாடளவில் மிகச்சிறப்பாகக் கொண்டாடிக்கொண்டிருக்கும்
இவ்வேளையில், ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத்
தெரிவித்துக்கொள்கிறேன். ஆசிரியர் தின விழாவோடு சேர்த்து என்னுடைய பிறந்த நாளையும்
கொண்டாடியது மகிழ்ச்சியான ஒன்று. உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும்
தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு பள்ளிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோரோடு, பள்ளி வாரியம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நிகழ்ச்சி காட்டுகிறது. பெற்றோர்
ஆசிரியர் சங்கமும் உடன் அமர்ந்திருப்பது மிக மிக முக்கியம். பெற்றோர் ஆசிரியர் சங்கம்
ஒரு பள்ளிக்குத் தூணாக விளங்குகிறது. பள்ளியின் செயல்பாடுகள் முழுமை அடைவதற்குப் பள்ளி
வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், தலைமை
ஆசிரியரின் ஒத்துழைப்பு, ஆசிரியர்களின் அக்கறை எல்லாம் மிக முக்கியம்.
அனைவரும் ஒற்றுமையாய் இருந்து, ஒரே நேர்க்கோட்டில் சிந்தித்துச்
செயல்பட்டால் மென்மேலும் பல சிறப்புகளோடு இப்பள்ளியும், மாணவர்களும்
திகழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.
இந்த நல்ல நாளில் ஆசிரியர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து எனது பிறந்தநாளையும் மகிழ்வித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆசிரியர்கள்தான் சமுதாயத்திற்கான எல்லாமுமாய் இருக்கிறார்கள். அத்தகைய ஆசிரியர்களை இந்த ஆசிரியர் தின நன்னாளில் போற்றி வணங்குகிறேன். இந்த நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்த அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றி” என்று கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *