கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் ஆதரவளிப்போம் - YB Teo Nie Ching

top-news
FREE WEBSITE AD

ரியோ x தேசிய இளைஞர் தினம் 2024, வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 25 & 26 தேதியில்), மலாக்காவில் உள்ள டத்தாரான் பஹ்லவானில் நடைபெறவுள்ளது. இது இளைஞர்களிடையே கலை மற்றும் படைப்பாற்றல் ஆர்வலர்களின் பங்கேற்பை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
தொடர்பு அமைச்சின் கீழ் இருக்கும் மைகிரியேதிவ் வென்ச்சர்ஸ் ஏற்பாடு செய்துள்ள கெம்பாரா ரியோ நிகழ்ச்சியின் கீழ் பல்வேறு விற்பனைகள், உணவுகளை வாங்குவதற்கான தளமாக இது இருக்கும் என தொடர்பு துணையமைச்சர் தியோ நி சிங் கூறினார்.
 
"கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் உதவுவதே எங்கள் விருப்பம், அதனால் அவர்கள் தங்கள் தயாரிப்புகளைப் பொதுமக்கள் முன்னிலையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு இது ஓரு நல்ல வாய்ப்பு."
 
"இவ்வார நிகழ்ச்சியில் நாங்கள் 12 விற்பனையாளர்களைக் கொண்டு வந்துள்ளோம். அவர்கள் தரமான ஆக்கப்பூர்வமான தயாரிப்புகளைக் கொண்ட இளைஞர்கள். அதனால்தான் இந்த குழு எங்கள் ஆதரவிற்கு தகுதியானது," என்று அவர் TV1இல் ஒளியேறிய செலாமாட் பாகி மலேசியா நிகழ்ச்சியில் கூறினார்.
 
கூடுதலாக, பார்வையாளர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்  இரவில் ஹுஜன், இன்சோம்னியாக்ஸ், டோல்லா, புங்கா, இ.எம்.நீதா போன்ற பல பிரபலமான கலைஞர்களின் பங்கேற்புடன் இலவச இசை நிகழ்ச்சிகளை ரசிக்க முடியும் என்று அவர் கூறினார்.
 
"கடந்த ஆண்டு நாங்கள் நான்கு இடங்களில் இந்த கெம்பாரா ரியோ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். இதன் ஒட்டுமொத்த விற்பனை சுமார் RM1.3 மில்லியனாக பதிவு செய்யப்பட்டது. ஆகவே, இந்த ஆண்டு அதை ஏழு இடங்களாக உயர்த்தினோம். செந்துல் டிப்போ மற்றும் ஜோகூர் பாருவுக்குப் பிறகு மூன்றாவது இடமாக மலாக்காவில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டில் நடைபெற்ற முதல் இரண்டு கெம்பாரா ரியோ நிகழ்ச்சிகளின் வசூல் RM1.3 மில்லியனைத் தாண்டி சாதனை படைத்துள்ளது" என்றார்.
 
ரியோ x தேசிய இளைஞர் தினம் 2024 கொண்டாட்டம், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கொண்டாடத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கவுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *