SPM 2023 சான்றிதழ் பெறத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு! - கல்வி அமைச்சு அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், மே 31: 2023ஆம்‌ ஆண்டு எஸ்பிஎம்‌ தேர்வில்‌ சான்றிதழைப்‌ பெறத்‌ தவறிய மாணவர்கள்‌, வரும்‌ ஆகஸ்ட்‌ மாதத்தில்‌ மீண்டும்‌ அத்தேர்வை எழுத கல்வி அமைச்சு ஊக்குவிக்கிறது. அத்தேர்வில்‌ தோல்வியுற்ற மாணவர்களை அப்படியே விட்டு விடாமல்‌ கல்வி அமைச்சு அவர்களுக்கு இன்னமும்‌ சில வாய்ப்புகளை வழங்குகிறது.

மீண்டும்‌ எஸ்பிஎம்‌ தேர்வை எழுதுவதன்‌ மூலம்‌, மலாய்‌ மற்றும்‌ சரித்திரப்‌ பாடங்களில்‌ அடைந்த தோல்வியை அவர்கள்‌ நிவர்த்தி செய்து கொள்ளலாம்‌ என்று, கல்வி தலைமை இயக்குநர்‌ அஸாம்‌ அட்னான்‌ தெரிவித்தார்‌.

மீண்டும்‌ எஸ்பிஎம்‌ தேர்வை எழுத தங்களுக்கு இன்னமும்‌ வாய்ப்பும்‌ இடமும்‌ இருக்கிறது என்பதை மாணவர்களை புரிந்துகொள்ளச்‌ செய்வது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகிறது” என்று அவர்‌ தெரிவித்தார்‌.

இதன்‌ மூலம்‌ எந்தெந்த பாடங்களில்‌ தோல்வி அடைந்திருக்கின்றார்களோ அப்பாடங்களை மாணவர்கள்‌, வரும்‌ ஆகஸ்ட்‌ மாதத்தில்‌ நடத்தப்படவுள்ள மறுதேர்வில்‌ எழுதலாம்‌. இத்தகைய முறை பல ஆண்டுகளாக நடப்பில்‌ இருந்தும்‌ வருகிறது.

மலாய்‌ மற்றும்‌ சரித்திரப்‌ பாடங்களில்‌ சிறப்புத்‌ தேர்ச்சி பெறவில்லை என்றால்‌, சம்பந்தப்பட்ட மாணவர்கள் சான்றிதழ்களைப்‌ பெறும்‌ தகுதியை இழந்து விடுவர்‌. ஆதலால்‌, ஆகஸ்ட்‌ மாதத்தில்‌ நடத்தப்படவிருக்கும்‌ மறுதேர்வை எழுதும்‌ வாய்ப்பை மாணவர்கள்‌ பயன்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌ என்று அஸாம்‌ கேட்டுக்‌கொண்டார்‌.

கோலாலம்பூர்‌ உலக வர்த்தக மையத்தில்‌ நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில்‌ கலந்து கொண்ட பின்னர்‌, செய்தியாளர்களிடம்‌ பேசும்போது அஸாம்‌ இதனைத்‌ தெரிவித்தார்‌.

2023ஆம்‌ ஆண்டுக்கான எஸ்பிஎம்‌ தேர்வு முடிவுகள்‌ கடந்த திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. அத்தேர்வை எழுதிய மொத்த மாணவர்களில்‌ சுமார்‌ 24 ஆயிரம்‌ அல்லது 6.5 விழுக்காட்டு மாணவர்கள்‌, மலாய்‌ மற்றும்‌ சரித்திரப்‌ பாடங்களில்‌ தேர்ச்சிப்பெறத்‌ தவறியதால்‌, சான்றிதழ்களைப்‌ பெறுவதில்‌ தோல்வியுற்றதாக, கல்வி அமைச்சு அன்றைய தினம்‌ கூறியிருந்தது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *