கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் 71 சட்ட விரோதக் குடியேறிகள் கைது!
- Muthu Kumar
- 08 Nov, 2024
(இரா.கோபி)
கோலாலம்பூர், நவ. 8-
கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 71 சட்ட விரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர் என்று கோலாலம்பூர் குடிநுழைவு இயக்குநர் வான் முகமட் சேபி பின் வான் யூசோப் தெரிவித்தார்.
சங்காட் புக்கிட் பிந்தாங்கில் உள்ள பாழடைந்த 6 மாடி கட்டடமொன்றில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கட்டடம் பல ஆண்டுகளாக கள்ளக் குடியேறிகளின் புகலிடமாக இருந்து வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.அக்கட்டடத்தின் கீழ் தளம் முழுவதும் குப்பை கூளமாகவும் துர்நாற்றமும் வீசியது என்று அவர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் 1 மணியளவில் குடிநுழைவு துறை அதிகாரிகளும் கோலாலம்பூர் மாநகர் மன்ற அதிகாரிகளும் கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகளும் அங்கு சோதனை மேற்கொண்டுள்ளனர். மொத்தம் 150 அந்நியர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 71 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சட்ட பூர்வமான ஆவணங்கள் ஏதுவும் இல்லை என்று அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் 56 ஆண்களும் 13 பெண்களும் 2 குழந்தைகளும் அடங்குவார்கள்.
அவர்கள் வங்காள தேசம், மியான்மார், நேப்பாளம், தாய்லாந்து, இந்தோனேசிய, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அவர் தெரிவித்தார். மேலும் சில வெளிநாட்டவர்கள் போலி பாஸ் வைத்திருந்ததும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் சட்டவிரோதமாக தங்க வைத்த குடியிருப்பின் உரிமையாளரை விசாரணைக்கு அழைப்பதாக அவர் தெரிவித்தார். இந்த அதிரடி சோதனையில் 42 குடிநுழைவு அதிகாரிளும் 59 போலீஸ் அதிகாரிகளும் கோலாலம்பூர் மாநகர் மன்ற அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர் என்று அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *