ஜாலான் பண்டார் நகர வீதி ஜாலான் தெண்டாயுதபாணியாக பெயர் மாற்றம்-சிவநேசன்!
- Muthu Kumar
- 06 Oct, 2024
தெலுக் இந்தான். அக்.6-
இங்குள்ள ஊராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்டுள்ள நகர வீதிகளில் ஒன்றான ஜாலான் பண்டார் ஜாலான் தெண்டாயுதபாணியாக பெயர் மாற்றம் பெறுவதற்கு தெலுக் இந்தான் ஊராட்சி மன்றத்தின் தலைவர் ஜைருல் அக்மால் காசிம் ஒப்புதல் அளித்துள்ளார் என பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும். இந்திய சமூக நல விவகாரத்திற்கு தலைமைவகிக்கும் சிவநேசன் தமிழ் மலரிடம் தெரிவித்தார்.
நேற்று பீடோர் மக்கள் சேவை மையத்தில் ஊராட்சி மன்ற தலைவரும்.சுங்காய் ஜசெக சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசனுடன் சாலை பெயர் மாற்றம் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. சுமார் 45 நிமிடங்கள் வரை நடைபெற்ற அந்த சந்திப்பில் இறுதியாக குறிப்பிட்ட சாலைக்கான பெயர் மாற்றம் என்பது இந்திய சமூகத்திற்கு ஓர் அடையாளமாகக் காணப்பட்டது என்றார் அவர்.
இந்த ஆண்டு தெலுக் இந்தான் அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலய சித்திரைத் திருநாளன்று தாம் வருகை அளித்தபோது வட்டார மக்கள் இந்த பகுதியை லிட்டில் இந்தியாவாக உருமாற்றக் கோரிக்கையை முன்வைத்திருந்தனர். அதற்கு முன்பாக இந்த வீதிக்கு தெண்டாயுதபாணி என்று பெயர் மாற்றம் செய்வதற்கு மாநில அரசின் சார்பில் முயற்சி செய்வேன் என்று அந்த மக்கள் சந்திப்பில் கூறியிருந்தேன் எனத் தெரிவித்தார்.
அதன் பயனாக ஊராட்சி மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் துணையுடனும். ஊராட்சி மன்ற தலைமையின் ஆதரவுடனும் பல ஆண்டுகளாக எதிர்பார்த்த இந்த திட்டம் நன்முறையில் தீர்வுகாணப்பட்டது. மேலும், இந்த சாலை அருகில் ஒரு நூற்றாண்டினை கடந்து விட்ட முருகன் திருத்தலம் அமைந்துள்ளது. மேலும் தெலுக் இந்தான் வள்ளல் டத்தோ சிதம்பரம்பிள்ளையின் அடையாளமாக அவரின் பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது.எல்லாம் நல்ல விதமாக நிறைவு பெற்றுவிட்டது.
வரும் ஆண்டு சித்திரைத் திருநாளில் இந்த பெயர் மாற்றம் குறித்து சட்ட ரீதியாக தாம் அறிவிக்கப் போவதாகவும் கூறிய சிவநேசன். இதனால் வட்டார இந்திய மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி வரும் பேரா மாநில மடானி அரசின் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சராணி முகமதுவுக்கும், ஊராட்சி மன்ற அதிகாரிக்கும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
தமிழ் மலர் பத்திரிகையில் கடந்த 29.9.2024ஆம் நாளன்று இந்த செய்தி குறித்து 16 ஆம் பக்கம் விரிவாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், மக்கள் நன்மையடையும் செய்திகளை அறிந்து உணர்ச்சி வசப்படாமல், நேர்மறையாக பிரசுரம் செய்து வரும் தமிழ் மலரின் செய்திப் பிரிவின் ஆசிரியர்களின் சேவை பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *