15 ஆயிரம் வெள்ளி வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு ரோன் 95 மானிய விலை பெட்ரோல் வழங்கக்கூடாது-லிம் குவான் எங்!
- Muthu Kumar
- 23 Oct, 2024
கோலாலம்பூர், அக். 23-
மாதத்திற்கு பதினைந்தாயிரம் வெள்ளியை வருமானமாகப் பெறும் குடும்பத்தினருக்கு ரோன் 95 மானிய விலை பெட்ரோல் வழங்கக்கூடாது. டி15 எனப்படும் அப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கம் இந்த வரம்பை விதிக்க வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பானின் பாகான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் நேற்று கோரிக்கை விடுத்தார்.
மாதத்திற்கு பதினைந்தாயிரம் வெள்ளிக்கும் அதற்கு மேற்பட்டும் வருமானம் பெறும் குடும்பத்தினரை டி15 பிரிவினர் என வகைப்படுத்த வேண்டும் என்று மக்களவையில் விநியோக மசோதா மீது நடைபெற்ற விவாதத்தின்போது குவான் எங் வலியுறுத்தினார்.அதிக வருமானம் கொண்ட டி15 பிரிவினருக்கு உதவித்தொகையுடன் கூடிய ரோன் 95 பெட்ரோல் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.
இதன்மூலம் ஆண்டுக்கு 800கோடி வெள்ளியை அரசாங்கத்தால் மிச்சப்படுத்த முடியும் என்றும் மிச்சமாகும் அப்பணத்தை கல்வி, சுகாதாரக் கவனிப்பு, பொதுபோக்குவரத்து போன்றவற்றை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *