கள்ளக் குடியேறிகள் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற உதவிய கேஸ்டேலோ கும்பல் பிடிபட்டது!
- Muthu Kumar
- 10 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 10-
செல்லத்தக்க ஆவணங்கள் இல்லாத கள்ளக் குடியேறிகள் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டை விட்டு வெளியேற உதவிய கேஸ்டேலோ கும்பலை அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். புக்கிட் அமான் மனித வர்த்தகம் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் எதிர்ப்பு துறையின் 3டி பிரிவு தஞ்சோங் காராங் மற்றும் ரவாங்கில் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் அந்த கும்பலின் நடவடிக்கை அம்பலத்திற்கு வந்தது.
அந்த கும்பல் ஒவ்வொரு சட்டவிரோதக் குடியேறியிடமிருந்தும் பயணக் கட்டணமாக 1,500 முதல் 2,300 வெள்ளி வரை வசூலித்து வந்துள்ளது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் 3டி உதவி தலைமை இயக்குநர் ஏசிபி சோஃபியான் சந்தோங் கூறினார்.
கடந்த புதன்கிழமை மாலை 6.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட முதல் சம்பவத்தில் இரு படகுகளை கடல் போலீசாரும் மலேசிய கடல்சார் அமலாக்க முகமையும் (ஏபிஎம்எம்) தஞ்சோங் காராங், சுங்கை பாகான் தெங்கோராக்கிலிருந்து 0.5 கடல் மைல் பகுதியில் தடுத்து நிறுத்தியதாக அவர் கூறினார். அப்படகுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 19 ஆண்கள், 14 பெண்கள், மூன்று சிறார்கள் உள்ளிட்ட 36 இந்தோனேசிய பிரஜைகளும் இரு படகோட்டிகளும் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த கைது நடவடிக்கையின் எதிரொலியாக நேற்று முன்தினம் குண்டாங்கிலுள்ள ஒரு குடியிருப்பில் அதிரடிச் சோதனை மேற்கொண்ட போலீசார் இருபது ஆண்கள், ஐந்து பெண்கள், ஒரு சிறுவன் உள்ளிட்ட 26 இந்தோனேசியர்களை கைது செய்தனர் என்றார் அவர். இவ்விரு இடங்களிலும் இருந்த அந்நியக் குடியேறிகளுக்கு ஒரே கும்பல் பொறுப்பாக இருந்துள்ளதோடு கடந்த ஆறு மாத காலமாக இக்கும்பல் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *