நிலப்பத்திரம் தொடர்பில் இன்றைய சட்டம் குறித்து வழக்கறிஞர் யோகேஸ் எம்.வீரசுந்தரம்!
- Muthu Kumar
- 24 Sep, 2024
கோலாலம்பூர், செப். 24-
வீடு, அலுவலகம், தோட்டம் என்று ஒரு நிலம் குறித்து உரிமை கொண்டாடுவது, அந்நிலத்தின் செயல்பாடுகள், அடுத்தகட்டமாக அந்த நிலத்தை என்ன செய்வது போன்ற அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் ஆதாரமாவது நிலப் பத்திரமே.
சட்ட ரீதியாக அதனை முறையாகப் பதிவு செய்வதிலும் பாதுகாப்பதிலும் அதிகமானவர்கள் கவனக்குறைவாக செயல்படுவதாக கூறுகிறார் வழக்கறிஞர் யோகேஸ் எம்.வீரசுந்தரம். நிலப் பத்திரம் முறையாக இல்லாமல் போனால் சம்பந்தப்பட்ட நிலத்தில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருந்தாலும் அல்லது விவசாயம், விளைச்சல் சார்ந்து எந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தாலும், ஒரு காலகட்டத்தில் அது உரிமையாளரின் கை நழுவிபோக வாய்ப்புள்ளதாகவும் யோகேஸ் தெரிவித்தார்.
தங்களின் நிலப் பத்திரத்தை முறையாகப் பாதுகாப்பதில் உரிமையாளர்களின் அலட்சியம் குறித்து யோகேஸ் குறைபட்டுக் கொண்டார். “ஒருவேளை பட்டா இருந்திருந்தாலும் அதன் மை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து அந்த எழுத்து தெரியாத அளவிற்கு போயிருக்கலாம். மேலும், அதிலுள்ள அந்த சில்வர் நிறத்திலான முத்திரை காலப் போக்கில் மறையத் தொடங்கியிருக்கலாம். கிழிந்து போயிருக்கலாம், களவாடப்பட்டிருக்கலாம். அவற்றுடன் வெள்ளம் நெருப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்களாலும் சேதமுற்றிருக்கலாம்,” என்று அவர் குறிப்பிட்டார். இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் பவர்கள் உடனடியாக போலீஸ் புகார் செய்ய வேண்டும் என்று கூறிய யோகேஸ், அந்த புகாரில் முன்வைக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் விளக்கினார். “அந்த நிலத்தின் உரிமையாளராக ஒருவரோ அல்லது அதற்கு மேற்பட்டவரோ எத்தனை பேராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் முழு பெயர் மற்றும் அடையாள அட்டை எண் ஆகியவற்றை அதில் குறிப்பிட்டிருக்க வேண்டியது அவசியமாகும். அதை அந்த நிலத்தின் பதிவு எண் உள்ளிட்ட அது குறித்த தகவல்கள் இருந்தாலும் அந்த புகாருடன் இணைப்பது சிறப்பாகும்," என்று யோகேஸ் ஆலோசனைக் கூறினார். இதையடுத்து சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆணையரிடம் சத்தியபிரமாணம் செய்ய வேண்டும்.
அதற்கு முன்னதாக நிலப் பத்திரம் எவ்வாறு தொலைந்தது, போலீஸ் புகாரில் குறிக்கப்பட்ட அத்தனை விஷயங்களையும் அவரிடம் முறையாக தெரிவிக்க வேண்டியது அவசியம் என்றும் யோகேஸ் குறிப்பிட்டார். ஆணையரிடமிருந்து சத்தியப் பிரமாணக் கடிதத்தை பெற்ற பிறகே, மாவட்டத்தை உட்படுத்தியிருக்கும் நில அலுவலகத்தில் புதிய நிலப்பத்திரம் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். அந்த விண்ணப்பத்திற்கு பிறகே, நில அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிலம் குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வு மேற்கொண்டு எந்த சிக்கலும் எழாத நிலையில், பின்னர் நிலப் பத்திரத்தை வழங்குவர் என்று அவர் கூறினார் ஆனால், அந்தந்த நில அலுவலகங்களுக்கு ஏற்றாற் போல இதற்கு கணிசமான கட்டணமும் வசூலிக்கப்படும் என்று நிலப்பத்திரம் தொடர்பில் இன்றைய சட்டம் தெளிவோம் அங்கத்தில் விளக்கம் அளிக்கும் போது யோகேஸ் இதனைத் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *