எங்கள் எதிர்காலத்தை மற்றவர்கள் முடிவு செய்வதை விரும்பவில்லை-ஹஜிஜி!
- Muthu Kumar
- 11 Nov, 2024
கோத்தாகினபாலு, நவ. 11-
சபா மாநிலத்தின் எதிர்காலத்தை, காபுங்ஙான் ரக்யாட் சபாவும் (ஜிஆர்எஸ்) சபா பக்காத்தான் ஹராப்பானும் முடிவு செய்யும் என்று, மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹஜிஜி நோர் தெரிவித்துள்ளார்.
“ஜிஆர்எஸ் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் மாநில அரசாங்கமும் இதில் அங்கம் வகிக்கும். அரசாங்கத்தின் எதிர்காலத்தை முடிவு செய்யப் போவது நாங்கள்தான். எங்களின் எதிர்காலத்தை மற்றவர்கள் முடிவு செய்வதை நாங்கள் விரும்பவில்லை. “என்னைப் பொறுத்த வரையில், நடப்பு அரசாங்கம் எனும் முறையில், எங்கள் மாநிலத்திற்கான சிறந்த தேர்வை நாங்களே முடிவு செய்ய வேண்டியுள்ளது” என்று, ஹஜிஜி தீர்க்கமாகக் கூறியுள்ளார்.
கோத்தாகினபாலுவில் உள்ள சபா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த, சபா மக்கள் ககாசான் கட்சியின் பொதுப் பேரவையை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது ஹஜிஜி இதனைத் தெரிவித்தார்.அக்கட்சித் தலைவரும் ஜிஆர்எஸ் தலைவருமான ஹஜிஜி, சபா பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணிக்கு இடையில் அண்மையில் நடந்த ஒரு சந்திப்பு குறித்து கருத்துரைக்கும்போது இவ்வாறு தெரிவித்தார்.
அந்த அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் தமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது என்று வர்ணித்த அவர், அது “சாதகமான ஒன்றாக” இருக்கலாம் என்று கோடிட்டு காட்டினார்.
மற்ற கூட்டணிகள் அல்லது கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்ற ஜிஆர்எஸ் திறந்த மனதுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சபா மாநிலத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு அரசியல் நிலைத்தன்மை மிக முக்கியம் என்று கூறிய ஹஜிஜி, “நிலைத்தன்மையும் அமைதியும் இல்லாமல், நாம் எத்தகைய விருப்பத்தைக் கொண்டிருந்தாலும் அவை வெறும் கனவுகளாக மட்டுமே இருக்கும்.
"தலைவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை யிட்டுக் கொண்டிருந்தாலும் நிலைத்தன்மையை அடைந்துவிட முடியாது. அதோடு, மக்களும் அதனுள் இழுக்கப்பட்டு விடுவார்கள்" என்று ஹஜிஜி தெரிவித்தார். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள், வாக்குகள் மூலம் மக்களால் புதிய அரசாங்கம் முடிவு செய்யப்பட்டு விடும் என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *