பினாங்கு மருத்துவ மாநாட்டில் புற்றுநோய் நிபுணர்களை இரு மடங்காக்க இலக்கு!
- Muthu Kumar
- 14 Oct, 2024
(ஆர்.ரமணி)
பினாங்கு, அக். 14-
நாட்டில் நிலவி வரும் புற்றுநோய் மருத்துவ வல்லுநர்களின் பற்றாக்குறைக்கு தகுந்த முறையில் தீர்வு காணும் ஓர் உத்தேச திட்டமாக, எதிர்வரும் 2040ஆம் ஆண்டுக்குள் தற்போது இருக்கும் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிப்பதற்கு, நேற்றோடு இங்கு நடைபெற்று நிறைவடைந்த புற்றுநோயியல் மருத்துவ மாநாட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மதுப் பழக்கம், புகையிலைப் பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பீடிப்பு, அதிகரித்து வரும் பட்சத்தில், தற்போது காலநிலை மாற்றத்தாலும் இந்நோயின் தாக்கம் முக்கிய காரணியாக உலகளாவிய நிலையில் பெரும் மருட்டலாக உருவாகியிருப்பதை, சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்திருப்பது பல்வேறு தரப்பினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இதன் பொருட்டு புற்றுநோய் பாதிப்பு உலகெங்கிலும் அதிக அளவில் கடுமையாகி வருவது, மருத்துவத் துறையினருக்கு ஒரு சவாலாக அமைந்திருக்கும் அதே வேளையில், அந்நோயின் பீடிப்பினால் பெரும் அவதியுற்று வரும் ஏராளமான நோயாளிகள் உகந்த முறையில் சிகிச்சை பெறுவதற்கு, அத்துறை சார்ந்த நிபுணர்களின் பற்றாக்குறையும் ஒரு மருட்டலாக உருவெடுத்து நிலைகுலையச் செய்திருப்பது, மிகுந்த வேதனையை அளித்திருக்கிறது.
இக்காரணங்களை உத்தேசித்து நாட்டில் தற்போதிருக்கும் 200 புற்றுநோய் மருத்துவ வல்லுநர்களின் எண்ணிக்கையை, எதிர்வரும் 2040 ஆண்டுக்குள் 400 என்ற இரட்டிப்புடன் இரு மடங்காக அதிகரிப்பதென்று,பினாங்கு மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி, நேற்றுடன் நிறைவடைந்த, மலேசிய புற்றுநோயியல்' மருத்துவ சங்கத்தினர் நடத்திய 3 நாள் தொடர் பேராளர் மாநாட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
மலேசிய நாட்டில் பல மாநிலங்களில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவ நிபுணர்களும், அத்துறையில் மேம்பாடு காண்பதற்கு தங்களை உகந்த பயிற்சிகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் முயற்சிகளில் ஆர்வம் காட்டி வரும் இளநிலை மருத்துவர்களும், அத்துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் வல்லுநர்களும், புதிதாக இணைந்திருக்கும் தொடக்க நிலை மாணவ மருத்துவர்கள் என, ஏறத்தாழ ஓராயிரம் பேராளர்கள் இம்மாநாட்டில் ஒருசேரபங்கேற்று, புற்றுநோய் மருத்துவத் துறையில் புதுமைப் புரட்சிக்கு வித்திட்டனர்.
மலேசிய புற்றுநோயியல் மருத்துவ சங்கத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் மருத்துவர் முத்துக்குமரன் தியாகராஜன் தமது செயற்குழுவினருடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த மருத்துவ மாநாட்டிற்கு, மாநில சுகாதாரத் துறை மற்றும் இளைஞர் விளையாட்டுப் பிரிவின் ஆட்சிக்குழு உறுப்பினரான டேனியல் கூய் சிறப்புப் பிரமுகராக வருகையளித்திருந்ததோடு, தாம் ஆற்றிய உரையில், உலகின் முதற் உயிர்க்கொல்லி நோயாக கிளம்பியிருக்கும் புற்றுநோய்க்கு எதிராக, அத்துறை சார்ந்த மருத்துவ வல்லுநர்கள் ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுப்பதில் கடுமையாகப் போராடுவது அவசியமென்று கேட்டுக்
கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *