இனியும் மின் சுடலைகளில் நம் சரித்திரம் எரிக்கப்பட வேண்டாம்! நல்லடக்கம் செய்யும் இடங்களை அமைப்போம்! - ஓம்ஸ் பா.தியாகராஜன் வேண்டுகோள்
- Shan Siva
- 30 Sep, 2024
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அண்மையில் நமது இந்தியப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசியது வரவேற்கத் தக்கது என்றும், இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் குறித்தும் அவர் கேட்டறிந்ததற்காக தமது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநரும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் நலன்கள் ஒற்றுமை அரசாங்கத்தால் ஒருபோதும் புறக்கணிக்கப்பட்டதில்லை என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், கல்வி, வழிபாட்டுத் தலங்கள், வேலைவாய்ப்புகள் உட்பட அனைத்து முக்கிய அம்சங்களும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் நமது பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதோடு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உணவுக்கூடை அன்பளிப்புக்காக 15 லட்சம் வெள்ளியும், இந்து மயானம் அல்லது இடுகாடுகள் நிர்மாணிப்பதற்காக 2 கோடி வெள்ளியும் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்திய சமுதாயத்திற்கு இது வரவேற்கத்தக்க செய்திதான்.
ஆனாலும், இந்து மயானம் அல்லது இடுகாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த 2 கோடி வெள்ளி நிதி எப்படிக் கையாளப்படப்போகிறது என்பதுதான் இங்கே கேள்வியாய் இருக்கிறது.
அதை விட முக்கிய விஷயம் நம் சமுதாயத்திற்கான மயானம் தொடர்பாக முதலில் நமக்கு என்ன தேவை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இறந்தவர்களுக்கான சடங்கு என்பது எல்லா மதங்களையும் போல, எல்லா இனத்தவரையும் போல நம்மவர்களுக்கும் புனிதமானதே. அதோடு, ஒருவர் இறந்த பின் அவரின் நல்லுடலை அடக்கம் செய்யும் மரபானது இறந்தவருக்குச் செய்யும் மரியாதை என்பது மட்டுமல்ல. அவர் வாழ்ந்துவிட்டுபோனதற்கான அடையாளத்தைச் சொல்லும் ஒரு வரலாறு.
நாம் வாழ்ந்தோம் என்பதை நாளையத் தலைமுறைக்குச் சொல்வதற்கான வரலாற்றுச் சான்று. பல நூறு ஆண்டுகள் கழிந்தாலும் நம்மைப் பற்றி நம்மவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளே சாட்சி சொல்லும்.
அப்படி இன்னும் நூறு வருடங்கள் கழித்து, நமது இந்தியர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்று சொல்வதற்கென்று, இவ்வளவு இந்தியர்கள் வாழ்ந்திருக்கிறார்களா என்று மற்றவர்கள் தெரிந்துகொள்ள, இது வரைக்கும் வாழ்ந்த நம்மவர்களின் புதைக்கப்பட்ட புனித இடங்கள் ஏதாவது இங்கே இருக்கிறதா என்றால், அது கேள்விக்குறிதான்.
அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு சிலர் சுயமாய் வைத்திருக்கிறார்கள் அவ்வளவுதான்.
இன்று மலாய்க்காரர்களுக்கும், சீனர்களுக்கும் அவர்களின் முன்னோர்களின் அடையாளங்கள் கல்லறைகளாய் எங்கும் வியாபித்திருக்கின்றன. அவர்கள் அந்த இடத்திற்குச் சென்று தங்கள் முன்னோர்களை வணங்க முடிகிறது. தெய்வமாய் போற்றுகிறார்கள்.
ஆனால், மின் சுடலைகளில் நம்மவர்களின் இறப்பு ஒருநாள்கூத்தாய் காணாமல் போய், நம் வரலாறு அத்தோடு எரிக்கப்படுவதுதான் மிச்சம்.
எனவே, 2 கோடி வெள்ளியைப் பிரதமர் இந்து மயானத்திற்காக ஒதுக்கியிருக்கும் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதோடு, மின் சுடலைகள் தேவை என்று சொல்வதை விட.... நம் இனத்திற்கான ஒரு நினைவிடத்தை, நம்மவர்களை நல்லடக்கம் செய்ய ஓர் இடத்தை ஒதுக்கித் தாருங்கள் என்று அரசிடம் கோரிக்கையை முன் வைக்க வேண்டும்.
சீனர்களைப் போல, மலாய்க்காரர்களைப் போல நாங்களும் எங்கள் முன்னோர்களை வணங்க வேண்டும். எம்மவர்களுக்கும் நினைவிடம் வேண்டும் என்று கேட்கப் பழக வேண்டும்.
எண்ணிக்கையில் அதிகமான மலாய் மற்றும் சீன சமூகத்தினருக்கே அடக்கம் செய்ய இடங்கள் அமையும் போது, நமக்கு மட்டும் ஏன் கிடைக்காது?
எனவே, நம் சமூகமும் இந்த நாட்டின் குடிமக்கள்தான் என்ற வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டுமானால், நம் சமுதாயத்தில் இறந்தவர்களை நல்லடக்கம் செய்ய நமக்கென்று பிரத்தியேக இடங்களை அரசு வழங்க வேண்டும்.
சீனர்களில் சில பிரிவினர் 'ஃபேரி பார்க்'கை உருவாக்கி, அங்கு இறந்தவர்களை எரிக்கிறார்கள். பின்னர் அஸ்தியை எடுத்து, அதைப் பாதுகாப்பாக ஓர் இடத்தில் வைத்து சேமிக்கிறார்கள்.
அதை நாமும் பின்பற்றலாம்... அந்த இடமே பூங்கா மாதிரி இருக்கும். நாமும் அப்படி ஓர் இடத்தை உருவாக்க வேண்டும். அந்த இடம் சுடுகாடு மாதிரி இருக்கக்கூடாது. உள்ளே நுழைந்தாலே கோயிலுக்குள் நுழைவதற்கு நிகரான உணர்வை ஏற்படுத்த வேண்டும்.
வருடா வருடம் குடும்பத்தோடு அங்கு சென்று இதோ என் தாத்தா, இதோ என் பாட்டி, இதோ என் அம்மா, இதோ என் அப்பா என கண்ணீர் மல்கக் கரைந்து, நம் சந்ததியினருக்கு அவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கான திதி போன்ற கடன்களைச் செய்து நெஞ்சுருகும் இடமாக அந்த இடம் அமைய வேண்டும்.
மேலும், சிறு சிறு கண்ணாடிப் பெட்டகங்களில் இறந்தவர் பற்றிய விவரக் குறிப்புகள் மற்றும் புகைப்படங்களோடு சீனர்கள் அந்த அஸ்தியை வைத்துப் பராமரிக்கிறார்கள். இந்த முறையை நாமும் கொண்டு வரலாம்.
அதோடு அஸ்தி சேமிப்பை சீனர்கள் தொழிலாகவும் செய்கிறார்கள். நாமும் அதைப் பின்பற்றினால் இறைவனடி சேர்ந்த நம்மவர்களுக்கான இடத்தை, நல்ல முறையில் பராமரிக்கவும் இயலும்.
வெறுமனே நம் உறவை எரித்துவிட்டு வந்துவிட்டால், கணக்கில் ஒன்று கழியுது என்றுதான் பொருள்படும். ஆனால், இந்த முறையில் அஸ்தியைச் சேமித்தால், வரலாறு பாதுகாக்கப்படும்.
இல்லையேல் இந்த நாட்டில், இவ்வளவு எண்ணிக்கையில் நாம் இருந்தோம் என்ற கணக்கே இல்லாமல் போய்விடும்.
எனவே, அரசு வழங்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதோடு, நம்மவர்களை நல்லடக்கம் செய்ய புனித இடம் மற்றும் அஸ்தியைச் சேமிக்க அழகான ஒரு கட்டடம் அமைய நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
மின் சுடலைகளில் இறுதிக் காரியம் நிறைவேறினாலும், அதில் உள்ள அஸ்தியை எடுத்து 'இன்னாரது அஸ்தி' என்ற குறிப்போடு அதைச் சேமித்து வைக்க நிச்சயம் சிறப்பான கட்டட வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அதோடு அந்த மயான இடத்தில் நல்லடக்கம் செய்யப்படுவதற்கான சிறப்பு வசதிகளும் நிர்மாணிக்கப்படுவதோடு, புனித ஆத்மாக்களின் இடம் என்ற உள்ளுணர்வை ஏற்படுத்தும் விதமாக வேலைப்பாடுகள் அமைய வேண்டும்.
இரண்டு மாடி கொண்ட கட்டடத்தில் கீழே சாங்கியம் செய்வதற்கும், மேலே கண்ணாடிப் பெட்டகங்களில் அஸ்தி மற்றும் விவரங்களைச் சேகரித்து வைப்பதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு சிறிய கட்டடத்திலேயே ஆயிரக் கணக்கான கண்ணாடிப் பெட்டகங்களை வைக்க முடியும். எரித்துவிட்டு கல்லறை கட்ட இயலாதவர்கள், இது போன்ற இடங்களில் இப்படி அஸ்தியை சேமித்து வைத்து வழிபடலாம்.
பொதுவாக எரித்த உடனேயே சரித்திரம் முடிந்து விடுகிறது. ஆனால், அடக்கம் செய்தால்தான் ஆண்டுகள் கடந்தும் அந்த ஆன்மா நினைவுகூரப்படுகிறது.
வரலாற்றை மறந்த இனம் உருப்படாது என்பார்கள். நாம் எரித்தே நம் சரித்திரத்தை முடித்துக்கொண்டிருக்கிறோம்.
எனவே, நம்மவர்களை நல்லடக்கம் செய்யும் புனித இடங்களைப் பெறுவதற்கு நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இதுதான் நம் சமுதாயத்தின் வேண்டுதலாய் இருக்க வேண்டும்.
அரசு சாரா அமைப்புகள், சமுதாயத் தலைவர்கள் இந்த விஷயத்தைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று ஓம்ஸ் பா.தியாகராஜன் கேட்டுக்கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *