மாநில அளவிலான மலேசியாவை சுத்தப்படுத்துவோம்-மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின்!
- Muthu Kumar
- 01 Oct, 2024
சிரம்பான், அக்.1-
நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் களமிறங்க மறுக்கும் அல்லது அலட்சியப்படுத்தும் மாநில அரசு துறை இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்குமாறு, மாநில அரசு செயலாளருக்கு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் உத்தரவிட்டார்.
நேற்று காலை இங்கு சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாமான் ஸ்ரீ மாவார் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற உலக துப்புரவு தினத்தை முன்னிட்டு, மாநில அளவிலான மலேசியாவை சுத்தப்படுத்துவோம் எனும் கொண்டாட்டத்தை மந்திரி பெசார் அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்தார்.
மேலும் பேசிய அமினுடின் நம் நாட்டு குப்பையை அந்நிய நாட்டவர்கள் துப்புரவு செய்கிறார்கள், ஆனால் சொந்த நாட்டுக்காரர்களான நம்மில் பலர் குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் போட்டு நாட்டை அசுத்தமாக்கி கொண்டிருக்கிறார்கள், நம் மக்களின் பொறுப்பற்ற செயல் வேதனை அளிக்கிறது என குறிப்பிட்டார்.
இன்றைய இந்நிகழ்வு மலேசியா எப்போதும் சுத்தமாகவும், பசுமையாகவும், அழகாகவும் மற்றும் நிலையானதாகவும் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது என தெரிவித்தார்.இந்த திட்டத்தின் முன்முயற்சியானது, சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதோடு, சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பொது துப்புரவு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதாகும்.
எனவே சுற்றுச்சூழலின் தூய்மை மற்றும் நிலைத்தன்மையைப் பேணுவதற்கான இந்த உன்னத முயற்சியில் ஒன்றிணைவோம்.இது நமது நேசத்துக்குரிய நாட்டின் அழகு மற்றும் நல்வாழ்வுக்கு பங்களிப்பதற்கான வாய்ப்பு என மந்திரி பெசார் கூறினார்.முன்னதாக அக்குடியிருப்பு பகுதியிலுள்ள கால்வாய்களில் இறங்கி துப்புரவு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார்.
அவருடன் மாநில ஊராட்சி மேம்பாடு, வீடமைப்பு மற்றும் போக்குவரத்து துறைக்கான அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார் ஜம்புநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணா, டத்தோ பண்டார் ஆகியோரும் களமிறங்கி துப்புரவு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *