தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்கி தீர்ப்பு!

- Muthu Kumar
- 28 Nov, 2024
நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டு இரண்டு மகன்களை பெற்றிருக்கிறார்கள். கடந்த 2004ஆம் ஆண்டு அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.காதலோடு நகர்ந்துகொண்டு இருந்த வாழ்க்கை கடந்த சில வருடங்களாக பிரிவோடு நகர்ந்துகொண்டிருந்தது. அவர்களை எப்படியாவது சேர்த்து வைப்பதற்கு இரு வீட்டாரும் முயன்றார்கள். சூழல் இப்படி இருக்க தங்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்கள்.
கோலிவுட்டில் பலரும் ஆச்சரியப்பட்ட திருமணங்களில் ஒன்று என்றால் அது ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் நடந்த திருமணம்தான். ஏனெனில் தனுஷ் நடிக்க வந்து சில வருடங்களிலேயே இந்தத் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் எப்படி காதல் மலர்ந்தது என்று அந்த சமயத்தில் பலரும் பேசிக்கொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு தனுஷ் தனது ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்தே எடுத்து வைத்தார். அதற்கேற்றபடி தனது திறமையையும் ஒவ்வொரு படத்திலும் வளர்த்துக்கொண்டே சென்றார்.
திருமணத்துக்கு பிறகு தனுஷின் வளர்ச்சியில் ஐஸ்வர்யாவும், ஐஸ்வர்யாவின் வளர்ச்சியில் தனுஷும் பங்கெடுத்திருந்தார்கள். முக்கியமாக தனுஷின் அழகு, நடை, உடை, பேசும் முறை என அனைத்திலும் ஐஸ்வர்யா மாற்றங்களை கொண்டு வந்தார். அதனை தனுஷே பல மேடைகளில் கூறியிருக்கிறார். அதேபோல் ஐஸ்வர்யாவின் இயக்குநராகும் ஆசைக்கு உறுதுணையாக இருந்து அவரது முதல் படமான 3 படத்தில் ஹீரோவாக நடித்தார் தனுஷ். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது.
இப்படி ஒற்றுமையோடு சென்றுகொண்டிருந்த அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில், "நாங்கள் இரண்டு பேரும் தனித்தனியாக பிரிந்து வெவ்வேறு பாதையில் பயணம் செய்வதற்கு முடிவு செய்திருக்கிறோம்" என்று கூறி அதிர்ச்சி கிளப்பினார்கள். திருமணமாகி இத்தனை வருடங்கள் கழித்து பிரிவா? என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர்கள் இந்த முடிவை எடுத்தார்கள். ஆனால் சட்டப்பூர்வமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு செல்லவில்லை. இதன் காரணமாக அவர்கள் இருவரையும் எப்படியாவது சேர்த்து வைக்க இரண்டு குடும்பத்தார்களும் முயன்றார்கள். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அண்மையில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு சென்றார்கள் இருவரும். சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு எண்ணங்களையும் கூறினார்கள்.
அதனையடுத்து இந்த விவாகரத்து வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்கி தீர்ப்பு கொடுத்திருக்கிறது நீதிமன்றம். இதனால் இருவருக்குமான 20 வருட திருமண பந்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதன் காரணமாக தனுஷும், ஐஸ்வர்யாவும் கண்டிப்பாக மீண்டும் சேர்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *