உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து  அமெரிக்கா வெளியேறினால்!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இதற்கிடையே உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய அமைப்புகளில் இருந்து அமெரிக்கா வெளியேறலாம் எனக் கூறப்படுகிறது.

ஒருவேளை இரு அமைப்புகளில் இருந்தும் வெளியேறும் முடிவை டிரம்ப் எடுத்தால் அது உலகையே புரட்டிப் போடுவதாக இருக்கும். சொல்லப்போனால் ஒரு வகையில் அது அமெரிக்காவுக்கும் பின்னடைவாக இருக்கும். இது குறித்து வர்த்தகப் பிரிவில் நாம்  பார்க்கலாம்.

அமெரிக்கா உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து வெளியேறலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த ஜி20 கூட்டத்திலும் கூட அமெரிக்க ட்ரஷரி செயலாளர் (Treasury Secretary) ஸ்காட் பெசென்ட் பங்கேற்கவில்லை.இது அமெரிக்காவின் வெளியேற்றம் குறித்த தகவலுக்கு வலுசேர்ப்பதாகவே இருக்கிறது. ஆனால், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறினால் அது சர்வதேச அரசியலை எப்படி மாற்றும் என்பது கேள்விக்குறியே?

அதற்கு முன் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பின்னணி என்ன என்றால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உலக ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்காகவும் எதிர்காலத்தில் போர்களைத் தடுக்கவும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றை உருவாக்கியது. இரண்டின் பணியும் உலக நாடுகளுக்குக் கடன் கொடுப்பது தான் என்றாலும், இரண்டும் செயல்படும் முறை முழுமையாக மாறுபட்டு இருக்கும்.

ஒரு நாடு சிக்கலில் இருக்கும் போது கடைசி முயற்சியாக சர்வதேச நாணய நிதியம் அந்த நாட்டிற்குக் கடன் கொடுக்கும். கிரீஸ், ​​அர்ஜென்டினா, அவ்வளவு ஏன் 1976 பொருளாதார சரிவுக்குப் பிறகு பிரிட்டன் நாட்டிற்கும் சர்வதேச நாணய நிதியம் உதவியுள்ளது. சமீபத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளிலும் பொருளாதார சிக்கல் மிகப் பெரியளவில் ஏற்பட்ட போது கடைசி நேரத்தில் கை கொடுத்தது இந்த சர்வதேச நாணய நிதியம் தான்.

அதேநேரம் இதுபோல இக்கட்டான சூழலில் கடன் தரும் போது சர்வதேச நாணய நிதியம் பல நிபந்தனைகளையும் விதிக்கும். அதாவது சிக்கலில் உள்ள நாடுகளைப் பல பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்யச் சொல்லி வலியுறுத்தும். வீண் செலவுகளைக் குறைப்பது, வெளிப்படையான பட்ஜெட் வரி வருவாயை உயர்த்துவது எனப் பொருளாதார சிக்கல்களைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கட்டாயப்படுத்தும்.

சிக்கலில் உள்ள ஒரு நாடு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்தால் அது குறிப்பிட்ட நாட்டிற்குக் கடன் கொடுக்க முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. ஏனென்றால், சர்வதேச நாணய நிதியம் கடன் தருவது மட்டுமின்றி, பொருளாதார சிக்கலைத் தீர்க்க நிபுணத்துவம் மற்றும் வழிகாட்டுதலையும் வழங்குகிறது.

அடுத்து உலக வங்கி..இது வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகள் ரயில் பாதைகள், மெட்ரோ பாதைகள், அணைகளைக் கட்ட குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது. சமீப காலமாக மாசை குறைக்கும் பசுமை திட்டங்களுக்கு இவர்கள் கடன் வழங்குவது அதிகரித்துள்ளது. அதாவது ஒரு வளரும் நாடு சிக்கலில் இல்லை என்றாலும் அவர்களின் வளர்ச்சிக்குக் கடன் கொடுப்பதே உலக வங்கியின் நோக்கமாகும்.

தற்போது உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என இரண்டிற்கும் அமெரிக்கா தான் அதிகபட்ச நிதியை அளித்து வருகிறது. சர்வதேச நாணய நிதியத்தில் 16% நிதி அமெரிக்காவிடம் இருந்தே வருகிறது. உலக வங்கியிலும் கிட்டதட்ட அதே அளவுக்கு அமெரிக்கா நிதியுதவி செய்கிறது. இதுபோல அதிகபட்ச அளவுக்கு நிதியுதவி செய்வதால் அமெரிக்காவால் குறிப்பிடத்தக்க அளவுக்குச் சர்வதேச அரசியலில் ஆதிக்கம் செலுத்த முடிகிறது.

ஒருவேளை இதில் இருந்து அமெரிக்கா விலகினால்.. அது இரு அமைப்புகளுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கே பெரிய இழப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேநேரம் அமெரிக்கா வெளியேறும்பட்சத்தில் அந்த இடத்திற்குச் சீனா வர வாய்ப்புகள் அதிகம். சீனா, ரஷ்யா நாடுகள் கூடுதல் நிதியை வழங்க ஆரம்பிக்கும். இதன் மூலம் சர்வதேச அரசியலை நிர்ணயம் செய்யும் சக்தி இரு நாடுகளுக்கும் வரலாம்.

குறிப்பாகச் சீனாவின் பங்களிப்பு இப்போது 5 சதவிகிதமாக உள்ள நிலையில், அது தனது பங்களிப்பை அதிகரிக்க ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நேரத்தில் அமெரிக்காவின் வெளியேற்றம் சீனாவுக்குச் சாதகமாக அமையலாம். இதனால் அமெரிக்கா எந்தவொரு முடிவையும் எடுக்கும் முன்பு தீவிர ஆலோசனை செய்தே முடிவெடுக்க வேண்டும் என வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *