சிறப்பாக நடைபெற்ற 2ஆவது ஹரிமாஉ தெற்கு கராத்தே கோப்பை 2024!
- Muthu Kumar
- 26 Sep, 2024
ஜொகூர் பாரு, செப். 26-
செப்டம்பர் 21 ஆம் தேதி சனிக்கிழமை 2ஆவது ஹரிமாஉ தெற்கு கராத்தே கோப்பை 2024 சுத்தரா மால், அட்ரியூம் ஊ இல் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற்றது. இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும், கராத்தே மாஸ்டர், முன்னாள் தேசிய கராத்தே வீரருமான பா.பால்மணிதேவன், “இந்த விழா ஜொகூரில் அங்கீகரிக்கப்பட்டு ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய நிகழ்வாக விளங்குகிறது" எனத் தெரிவித்தார்.
இந்த விழாவை, இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லியூ சின் தோங்கின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி அமர் அரிஃபின் தொடங்கி வைத்தார். இந்த கராத்தே போட்டியில் 15 கிளப்புகளைச் சேர்ந்த மாணவர்களில் ஆண் 258 மாணவர்களும் பெண் 133 மாணவிகளும் கலந்து கொண்டனர். 15 கிளப்புகள் கெடா, சிலாங்கூர், பேரா, மலாக்கா, நெகிரி செம்பிலான், ஜொகூர் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களைச் சேர்ந்தவை என்றார். இந்தப் போட்டியில் 9 பிரிவுகள் இடம்பெற்றன.
"கராத்தே என்பது உடல், மனம், மற்றும் ஆவி ஆகிய மூன்றுக்கும் சமநிலையை உருவாக்கும் கலை. இது ஒரு மனிதனின் மனநிலை, கவனம், மற்றும் உளவியல் திறமைகளை மேம்படுத்துவதோடு, நல்ல குடிமகனாக உருவாக உதவுகிறது. ஜப்பானியர்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு," என்றார்.
இந்திய மாணவர்கள் விளையாட்டுப்போட்டிகளில் குறைவான ஈடுபாடு காட்டுவது குறித்து பேசுகையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனித்துவமான விளையாட்டுகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றார். இதன் மூலம் மாணவர்களின் சிந்தனைத் திறன் மற்றும் உடல் வளம் மேம்படும். தற்போதைய காலகட்டத்தில் இந்திய மாணவர்கள் கராத்தேயில் முக்கியமான நிலையை அடைந்துள்ளனர் என ஹரிமாஉ தெற்கு கராத்தே சங்கத் தலைவர் பா. முருகதேவன் கூறினார்.
இந்த 2ஆவது ஹரிமாஉ தெற்கு கராத்தே 2024 கோப்பையை கூலாய் கராத்தே சங்கம் வென்றது. இந்த போட்டியில் 2 தங்கம், ஒரு வெள்ளி என பதக்கம் பெற்று சிறந்த கராத்தே மாணவனாக ராஜேந்திரன் தேர்வுசெய்யப்பட்டார். போட்டிகள் முடிந்ததும் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வை ம.இ.கா. இஸ்கண்டார் புத்ரி தொகுதி தலைவர் சங்கரபாண்டியன் நிறைவு செய்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *