பயங்கரவாதக் குற்றச்சாட்டப்பட்ட உலு திராம் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்திய ஆடவனின் தந்தை மற்றும் சகோதரி!
- Muthu Kumar
- 24 Oct, 2024
கோலாலம்பூர்,
அக். 24-
இவ்வாண்டு மே மாதம் உலு திராம் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்திய ஆடவனின் தந்தை மீதும் சகோதரி மீதும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நேற்று பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) எனப்படும் பயங்கரவாதக் கும்பலை ஆதரித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அக்குற்றச்சாட்டை அவர்கள் மறுத்தனர். சுடும் ஆயுதங்களை வைத்திருந்ததாகத் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் அவர்கள் மறுத்தனர். போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்திய ராடின் லுக்மானின் தந்தை ராடின் இம்ரான் ராடின் முகமது யாசின் (வயது 62) மீது உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ அஸார் அப்துல் ஹமீட் முன்னிலையில் மூன்று குற்றங்கள் சுமத்தப்பட்டன.தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் பயங்கரவாதச் சித்தாந்தத்தைப் போதித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
மேலும், நான்கு நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்ததாக அவர் மீது மேலும் இரண்டு குற்றங்கள் சுமத்தப்பட்டன.அதிகப்பட்சம் நாற்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டம் 130ஜி (ஏ) பிரிவின் கீழ் அக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அதே வேளையில், ராடின் இம்ரானின் மகள் ஃபாரா சோப்ரினா (வயது 23) என்பவர் மீது பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட தகவல்களை மறைத்து வைத்ததாக தண்டனைச் சட்டம் 130ஜே (1) பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
இவ்வாண்டு மே மாதம் 17ஆம் தேதி அதிகாலை 2.54மணியளவில் ஜொகூரின் உலுதிராம் போலீஸ் நிலையத்திற்குள் வெட்டுக் கத்தியுடன் நுழைந்த ராடின் லுக்மான் (வயது 21), கான்ஸ்டபிள் அமாட் அஸ்ஸா (வயது 22) என்பவரை வெட்டிக் கொன்றான். மேலும், கான்ஸ்டபிள் முகமது ஷாபிக் என்பவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கியையும் இயந்திரத் துப்பாக்கியையும் பறித்த பின்னர் அவரையும் ராடின் லுக்மான் சுட்டுக் கொன்றான். மற்றொரு போலீஸ் அதிகாரியான முகமது ஹனிப் என்பவரும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்றார்.நிகழ்விடத்திலேயே ராடின் லுக்மானும் சுட்டுக் கொல்லப்பட்டான்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *