அடுத்து நடக்க இருக்கும் பொருளாதார வீழ்ச்சி ஆபத்தானது- ராபர்ட் கியோசாகி!

- Muthu Kumar
- 20 May, 2025
பிரபல நிதி ஆலோசகரும், "பணக்கார தந்தை, ஏழை தந்தை" (Rich Dad Poor Dad) புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி, வரவிருக்கும் பெரும் பொருளாதார நெருக்கடி குறித்து மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது சமீபத்திய எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பதிவில், கடந்த கால பொருளாதார நெருக்கடிகளின் வளர்ச்சி மற்றும் அவற்றில் இருந்து மீள்வதற்கு தேவைப்பட்ட (bailouts) அளவு அதிகரித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.1998 ஆம் ஆண்டில், நீண்ட கால மூலதன மேலாண்மை (LTCM) என்ற ஹெட்ஜ் நிதியை (hedge fund) வால் ஸ்ட்ரீட் காப்பாற்றியது. பின்னர் 2008 ஆம் ஆண்டில், மத்திய வங்கிகள் தலையிட்டு வால் ஸ்ட்ரீட்டை மீட்டன.
தற்போது, 2025 ஆம் ஆண்டில் மத்திய வங்கிகளை யார் காப்பாற்றுவார்கள் என்று தனது நீண்டகால நண்பரான ஜிம் ரிக்கார்ட்ஸ் கேள்வி எழுப்புவதாக கியோசாகி குறிப்பிட்டுள்ளார்.1971 ஆம் ஆண்டில் அதிபர் நிக்சன் அமெரிக்க டாலரை தங்கத்தின் மதிப்பிலிருந்து பிரித்ததில் இருந்து, ஒவ்வொரு நிதி நெருக்கடியும் பெரிதாகி வருகிறது, ஏனெனில் மூலப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்று கியோசாகி கூறுகிறார்.
ஜிம் ரிக்கார்ட்ஸின் கருத்துப்படி, அடுத்த பெரிய நெருக்கடியானது 1.6 டிரில்லியன் டாலர் அளவுக்கு உள்ள, மாணவர் கடன்களால் ஏற்படக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார். பொய்யான பணம் ஆபத்து பல ஆண்டுகளாக காகிதப் பணத்தை (fiat money) சார்ந்திருப்பதன் ஆபத்துகள் குறித்து கியோசாகி எச்சரித்து வருகிறார். ஃபியட் பணம் என்பது தங்கம் அல்லது வெள்ளி போன்ற எந்தவொரு பொருளின் மதிப்பு அடிப்படையிலானது இல்லை. மாறாக, இதன் மதிப்பு அரசாங்கத்தின் கட்டுப்பாடு மற்றும் வெளியிடும் அதிகாரத்தின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையிலிருந்து பெறப்படுகிறது.
இந்த நம்பிக்கை அரசாங்கத்தின் அதிகாரம் மற்றும் அது நாணய விநியோகத்தை நிர்வகிக்கும் விதத்தை பொருத்தது. அமெரிக்க டாலர், யூரோ மற்றும் இந்திய ரூபாய் உள்ளிட்ட பெரும்பாலான நவீன நாணயங்கள் ஃபியட் நாணயங்களே. இருப்பினும், நாணய விநியோகம் தவறாக நிர்வகிக்கப்பட்டாலோ அல்லது பொதுமக்களின் நம்பிக்கை குறைந்தாலோ பணவீக்க அபாயத்தையும் இது கொண்டுள்ளது.
கியோசாகி மேலும் கூறுகையில், தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி, "போலியான காகிதப் பணத்தைச் சேமிக்காமல் இருப்பதில்தான் உள்ளது" என்று அவர் கூறியுள்ளார். 25 ஆண்டுகளுக்கு முன்பு "பணக்கார தந்தை, ஏழை தந்தை" புத்தகத்தில் கூறிய அறிவுரையை மீண்டும் வலியுறுத்திய அவர், "பணக்காரர்கள் பணத்திற்காக வேலை செய்வதில்லை" அதேபோல பணத்தை "சேமிப்பவர்கள் தோற்பவர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலான மக்களுக்கு, தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்கான மிகச் சிறந்த வழி, தங்கள் விஷயங்களைத் தாங்களே கவனித்துக் கொள்வதுதான். தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் போன்ற உண்மையான சொத்துக்களைச் சேமிக்க மக்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.2012 ஆம் ஆண்டில் தனது "பணக்கார தந்தையின் தீர்க்கதரிசனம்" (Rich Dad's Prophecy) என்ற புத்தகத்தில் எச்சரித்த பொருளாதார வீழ்ச்சி இப்போது தொடங்கிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கிகளான ஃபெடரல் ரிசர்வ் போன்றவற்றை யார் காப்பாற்றுவார்கள் என்று ஜிம் ரிக்கார்ட்ஸ் கேள்வி எழுப்புவது சரியாக இருந்தால், "உங்களை யார் காப்பாற்றுவார்கள்?" என்ற மிக அவசரமான கேள்வி எழுகிறது என்று கியோசாகி தெரிவித்துள்ளார். தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் போன்ற உண்மையான சொத்துக்களில் முதலீடு செய்வதன் மூலம் தங்களைக் கவனித்துக் கொள்ளவும் பாதுகாத்துக் கொள்ளவும் தன் செய்திகளை நம்புவர்களை கியோசாகி வலியுறுத்தியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *