ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியிருக்கும் வேளையில் அந்நாட்டில் மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை!
- Muthu Kumar
- 27 Oct, 2024
புத்ராஜெயா, அக். 27 -
ஈரான் மீது இஸ்ரேல் நேற்று சனிக்கிழமை காலையில் தாக்குதல்களை நடத்தியிருக்கும் வேளையில், அந்நாட்டிலுள்ள மலேசியர்கள் யாரும் அதில் பாதிக்கப்படவில்லை என்று. விஸ்மா புத்ரா அறிவித்துள்ளது.ஈரானில் நடக்கும் நிலவரங்களை, அந்நாட்டு தலைநகர் தெஹ்ரானில் உள்ள மலேசிய தூதரகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
“உள்ளூர் அதிகாரத் தரப்பினர் வழங்கி வரும் வழிகாட்டிகள் உட்பட ஆகக் கடைசியான தகவல்களைப் பின்பற்றுமாறும் அமைதியாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறும் ஈரானில் உள்ள அனைத்து மலேசியர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்” என்று நேற்று சனிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் அது கூறியுள்ளது.
ஈரான் மீதான தாக்குதலை வெளியுறவு அமைச்சு கண்டித்திருப்பதுடன், வட்டார நிலைத்தன்மைக்கு கடுமையான பாதகத்தை இஸ்ரேல் ஏற்படுத்தி இருப்பதுடன், அனைத்துலக சட்டத்தையும் அது மீறியிருப்பதாக வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.இஸ்ரேலின் தாக்குதல்களினால் ஏற்பட்டிருக்கக் கூடிய உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக, விஸ்மா புத்ரா தெரிவித்தது.
இம்மாதம் ஒன்றாம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் நடத்தியிருந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக,அந்நாட்டின் ராணுவ இலக்குகள் மீது தான் தாக்குதல்களை தொடுத்திருப்பதாக, இஸ்ரேல் கூறியதாக, ராய்ட்டர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
அக்டோபர் ஒன்றாம் தேதி இஸ்ரேலை நோக்கி ஈரான் சுமார் 200 பாலிஸ்டிக் எறிபடைகளை பாய்ச்சியது முதல், மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த ஆறு மாத காலகட்டத்தில் ஈரான் இரண்டாவது முறையாக அக்டோபர் ஒன்றாம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி இருந்தது. ஈரான் மற்றும் அதன் பினாமிகளின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க தனக்கு உரிமையும் கடமையும் இருக்கிறது என்று இஸ்ரேல் கூறியிருந்தது.
ஈரானின் மொத்தம் ஐந்து முக்கிய பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடுத்திருப்பதாகவும் தெஹ்ரானில் பல முறை வலுவான வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் ஈரானிய தொலைக்காட்சி தெரிவித்தது. அருகில் உள்ள கராஜ் பகுதியிலும் கடுமையான வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் அது கூறியது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *