வேள்பாரி நாவலை திரைப்படமாக எடுப்பதற்கு ஷங்கருக்கு காத்திருக்கும் பெரிய சவால்கள்!
- Muthu Kumar
- 26 Sep, 2024
சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதுவரை இயக்குனர் ஷங்கர் இயக்கிய படங்களில் இந்த அளவுக்கு மோசமான ஒரு தோல்வியை தழுவிய படம் எதுவும் இருக்க முடியாது. அந்தளவுக்கு இந்த படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது.
இந்த சூழலில் மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற வரலாற்று நாவலை திரைப்படமாக எடுக்க இயக்குனர் ஷங்கர் முடிவு செய்திருக்கிறார். அந்த நாவலின் காப்புரிமையை வாங்கியுள்ள அவர். ராம் சரண் நடிப்பில் கேம்சேஞ்சர் மற்றும் இந்தியன் 3 ஆகிய படங்களை முடித்த பிறகு, வேள்பாரி படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டு இருந்தார். இதற்கிடையே வேள்பாரி கதையில் வரும் முக்கிய சம்பவங்களை திருடி சில படங்களில் காட்சிகள் வருவது சமீபத்தில் வந்த டிரெய்லர் மூலம் தெரிய வந்தது. இதனால் இயக்குனர் ஷங்கர் கடும் கோபமடைந்தார்.
வேள்பாரி நாவலின் உரிமம் நான் பெற்றுள்ள நிலையில் நாவலில் வரும் சம்பவங்களை, முக்கிய நிகழ்வுகளை திருடி தங்களது படங்களில், வெப் சீரியல்களில் யாரும் பயன்படுத்தினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். எனினும் இன்னும் சிலர் வேள்பாரி நாவலின் சில காட்சிகளை எடுத்துக் கொண்டிருப்பதால், இனி விரைவில் வேள்பாரி படத்தை இயக்க துவங்கி விட வேண்டும் என்ற நெருக்கடிக்கு இயக்குனர் ஷங்கர் தள்ளப்பட்டுள்ளார்.
இந்த படத்தில் சரித்திர கதாபாத்திரங்களில் விக்ரம், சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என்று திட்டமிட்ட ஷங்கர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். ஆனால் இந்தியன் 2 தந்த மிகப்பெரிய தோல்விக்கு பிறகு வேள்பாரி சரித்திர நாவலை படமாக்குவதில் பல சவால்களை இயக்குனர் ஷங்கர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
வேள்பாரி படத்தை 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 3 பாகங்களாக ஷங்கர் இயக்குகிறார். இந்தியன் 2 மிக மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், வேள்பாரி சரித்திர நாவலை 3 பாகங்களாக ஷங்கர் எப்படி எடுக்க போகிறார், அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க எந்த தயாரிப்பாளர் முன்வருவார் என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விகளாக எழுந்துள்ளது. வேள்பாரி படத்தை அவர் 3 பாகங்களாக எடுத்து முடிப்பதற்குள் நாவலில் உள்ள முக்கிய அம்சங்களை, சம்பவங்களை எல்லாம் மற்ற படங்களில் காட்டிவிட்டால் ஷங்கர் இயக்கும் வேள்பாரி படத்தில் சுவாரஸ்யம், முக்கியத்துவம் போய் விடுமே என்ற குழப்பமும், ஷங்கருக்கு எதிரான பெரிய சவால்களாக உள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *