இந்து பொதுச் சேவை ஊழியர்கள்,மனிதவள இலாகா பயிற்சிக் கழக இந்து மாணவர்களுக்கும் நான்கு நாட்கள் தீபாவளி விடுமுறை!
- Muthu Kumar
- 27 Oct, 2024
கோலாலம்பூர், அக். 27 -
இந்து பொதுச் சேவை ஊழியர்களும் மனிதவள இலாகா பயிற்சிக் கழகங்களில் பயிலும் இந்து மாணவர்களும், இவ்வாண்டில் நான்கு நாள்களுக்கு தீபாவளி விடுமுறையை அனுபவிக்க விருக்கின்றனர்.
இந்து பொதுச் சேவை ஊழியர்கள் தீபாவளிக்கு முதல் நாள் அல்லது மறுநாளில், பதிவு பெறாத விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் என்று, பொதுச் சேவை இலாகா (ஜேபிஏ) அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அவர்கள், தீபாவளிக்கு முதல் நாள் அந்த விடுமுறையை எடுத்துக் கொண்டால், புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரையில் விடுமுறையில் இருக்கலாம்.
தீபாவளிக்கு மறுநாள் அத்தகைய விடுமுறையை அவர்கள் எடுத்தால், தீபாவளி நாளான வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் விடுமுறையில் இருக்கலாம் என்று ஜேபிஏ அறிவித்துள்ளது.
இத்தகைய பதிவு பெறாத விடுமுறை வாய்ப்பு, மாநில பொதுச் சேவை ஊழியர்கள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் ஊராட்சி மன்றங்களுக்கும் பொருந்தும். அது பொதுச் சேவை ஊழியர்களுக்கான மேலதிகாரிகளின் அங்கீகாரத்திற்கு உட்பட்டது என்று, ஜேபிஏ கூறியுள்ளது.
இந்நிலையில், மனிதவள இலாகாவின் அனைத்து பயிற்சிக் கழகங்களிலும் பயிலும் மாணவர்களும் இந்த நான்கு நாள் தீபாவளி வார இறுதி விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம். ஜொகூர், கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் உள்ள பயிற்சிக்கழகங்களுக்கு அக்டோபர் 30ஆம் தேதி புதன்கிழமையும் இதர மாநிலங்களில் உள்ள பயிற்சிக் கழகங்களுக்கு நவம்பர் ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமையும் இந்தக் கூடுதல் விடுமுறை வழங்கப்படும் என்று, மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
இப்பயிற்சிக் கழகங்களில் 1,500 இந்திய மாணவர்கள் இருப்பதால், அனைத்து மாணவர்களுக்கும் ஒரு கூடுதல் விடுமுறையை வழங்க அமைச்சு இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார். எனினும், தீபாவளி முடிந்து பயிற்சிக் கழகங்களுக்கு திரும்பிய பிறகு, இந்த கூடுதல் விடுமுறைக்கு பதிலாக அம்மாணவர்கள் வேறொரு நாளில் வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று சிம் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *