கோப்பி நாயின் படுகொலை! புத்ராஜெயாவில் குவிந்த மக்கள்! டாக்டர் பழனீஸ்வரன் தியாகராஜன் கண்டனம்!
- Thina S
- 19 Oct, 2024
மக்களால் நேசிக்கப்பட்ட கோப்பி எனும் நாயைச் சுட்டுக்கொன்றதற்கு நீதி கேட்டு, நேற்று மாலை புத்ராஜெயாவின் கால்நடை மேலாண்மை வாரியத்தின் முன் பொதுமக்களும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினரும் அமைதி மறியலில் ஈடுபட்டனர்.
கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி திரங்கானுவில் உள்ள BESUT நகரின் மாவட்டக் கழகத்தினர் கோப்பி எனும் நாயைத் துப்பாக்கியால் சுட்டது மிருகவதையின் உச்சம் என சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் இறங்கினர். இது தொடர்பாக பெசூட் மாவட்ட அலுவலகத்திலும், பெசூட் மாவட்டக் காவல் நிலையத்திலும், திரங்கானு நீதிமன்றத்திலும் தொடர்ச்சியாக மனு வழங்கப்பட்டதை அடுத்து தற்போது சம்மந்தப்பட்ட அரசுத் துறையின் தலைமை கழகத்தின் தலைமை இயக்குநரிடமும் மிருகவதைக்கான மனு வழங்கப்பட்டது. 12 அரசு சாரா இயக்கங்கள் ஒருங்கிணைந்து GHRH எனும் அனைத்துலக மனித உரிமைக் கூட்டமைப்பின் தலைமையில் இந்த அமைதி மறியல் நடந்தேறியது. சுமார் 150க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற நிலையில் புத்ராஜெயாவின் கால்நடை மேலாண்மை வாரியத்தின் தலைமை இயக்குநர் DR. MOHD RAZLI bin RAZAK அவர்களிடம் அமைதி மறியலுக்கானக் காரணத்தை மனுவாக வழங்கினர். மனுவை ஏற்ற தலைமை இயக்குநர் மிக விரைவில் இது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி சுமூகமானத் தீர்வைக் காண்பதாக நம்பிக்கை அளித்தார்.
இந்நிலையில் ஓம்ஸ் குழுமத்தின் நிர்வாகத் தலைவரும், மலர் டிவியின் நிர்வாக இயக்குநருமாகிய டாக்டர் பழனீஸ்வரன் தியாகராஜன் கோப்பி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அனைத்துவிதமான உயிர்களும் வாழ்வதற்காகத்தான் இந்த பூமி படைக்கப்பட்டுள்ளது. நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல இந்த உலகம். எனவே, மக்களின் மகிழ்ச்சியாக விளங்கிய கோப்பி எனும் அந்த அப்பாவி ஜூவனைச் சுட்டுக்கொன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் பழனீஸ்வரன் தியாகராஜன் கேட்டுக்கொண்டார். இதுபோன்ற ஜீவன்களால் இடையூறுகள் என்று நினைத்தால், அதற்காக கொல்வதுதான் முறையான செயலா? வேறு வழியே இல்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். அத்தகைய அப்பாவி ஜீவன்களை வேறு எங்கோ கொண்டு சென்று வாழ்வதற்கு வகை செய்திருக்கலாம். ஆனால், இப்படி அநியாயமாக சுட்டுக் கொல்வது மனிதாபிமானமற்ற செயல் என அவர் அறிவுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *