கோப்பி சுட்டுக் கொலை: பெசூட் மாவட்ட மன்றத்திற்கு எதிராக விலங்கியல் உரிமைக் குழு வழக்கு
- M.ASAITHAMBY -
- 16 Oct, 2024
கோலாலம்பூர், அக். 16 -
உள்ளூர் மக்களால் கோப்பி என்று செல்லமாக அழைக்கப்பட்ட நாயை சுட்டுக் கொன்றதற்காக, பெசூட் மாவட்ட மன்றத்திற்கு எதிராக, விலங்கியல் உரிமைகள் குழுக்கள் அடங்கிய ஓர் கூட்டணி சிவில் வழக்கைத் தெடுக்க விருக்கிறது.
இம்மாதம் 6ஆம் தேதி கோப்பி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள மாநில அரசு ஊழியர்கள் அனைவர் மீதும் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என்றும் இதன் தொடர்பில் அடுத்த வாரத்தில் திரெங்கானு உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுக்கப் போவதாகவும் விலங்கியல் உரிமைகள் வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் தெரிவித்தார்.
“கோப்பி சுட்டுக் கொல்லப்பட்டதில் சம்பந்தப்பட்டிருக்கும் அனைத்து அரசு ஊழியர்களும், 2015ஆம் ஆண்டு விலங்கியல் நலச் சேவைத் திட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
“அவர்கள் அனைவருக்கும் எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம். மேல் நடவடிக்கை இல்லை என்று எங்களின் போலீஸ் புகாரில் குறிப்பிடப்பட்டால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவும் போவதில்லை. வீதிகளில் சுற்றுத் திரியும் நாய்களைக் கொல்வதை நிறுத்துங்கள்” என்று ராஜேஸ் தெரிவித்தார்.
கோப்பிக்கு ஆதரவாக சில குழுக்களைச் சேர்ந்த சுமார் 100 பேர், போலீஸ் புகார் செய்வதற்காக, நேற்று செவ்வாய்க்கிழமை செந்தூல் போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர்.
இச்சம்பவத்திற்கு கால்நடைச் சேவை இலாகா அவசியம் பொறுப்பேற்க வேண்டும் என்று, சிலாங்கூர் ஃபியூரி ஃபியூச்சர் என்ற சங்கத்தின் தலைவர் எஸ். சசிகுமார் கேட்டுக் கொண்டார்.
“வரும் வெள்ளிக்கிழமை அவ்விலாகாவிடம் ஒரு மகஜரை நாங்கள் வழங்க விருக்கின்றோம். அவர்களும் இதற்கு போறுப்பேற்க வேண்டும். இத்தகைய கோடூரச் செயல் அவசியம் நிறுத்தப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
விலங்குகளுக்கான நீதியில் சமரசம் காணப்படக் கூடாது என்று கேட்டுக் கொண்ட, மூத்த சமூக இயக்கவாதியான டான் ஸ்ரீ லீ லாம் தை, விலங்குகளின் நலன்கள் மீது கவனம் செலுத்துமாறு அதிகாரத் தரப்பினரை வலியுறுத்தியதோடு, கோப்பியின் கொலைக்கு நியாயமான காரணம் ஏதும் இல்லை என்றார்.
வீதிகளில் சுற்றித் திரியும் நாய்களைக் கையாள்வதில் ஈடுபட்டுள்ள அரசாங்க ஊழியர்கள், தங்களின் எல்லையை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் வெறுமனமே அவற்றைக் கொல்லக் கூடாது என்றும் மற்றொரு விலங்கியல் நலச் சேவை வழக்கறிஞரான சன்னி உங் அறிவுறுத்தினார்.
திரெங்கானுவின் ஜெர்த்தே என்ற இடத்தில், ஒரு பூனைக் குட்டியுடன் கோப்பி விளையாடிக் கொண்டிருந்த காட்சி அடங்கிய ஒரு காணொளி, கடந்த மார்ச் மாதத்தில் டிக்டோக்கில் பகிரப்பட்ட பின்னர், நாய் பிரியர்கள் மத்தியில் கோப்பி மிகவும் பிரபலமானது.
ஆனால், இம்மாதம் 6ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட வீதிகளில் சுற்றித் திரியும் நாய்களைக் கொல்லும் நடவடிக்கையின்போது, கோப்பி சுட்டுக் கொல்லப்பட்டதாக, மை ஃபோரெவர் டோகோ என்ற கணக்கில் ஒரு செய்தியை விலங்குப் பிரியர் ஒருவர் பதிவேற்றம் செய்திருந்தார். அதைப் பார்த்த பலர் கோப்பிக்கு நேர்ந்ததை மிகக் கடுமையாகச் சாடியிருந்தனர்.
கோப்பி நடமாடி வந்த இடங்களில் வசிப்பவர்களில் ஒருவர்கூட அதைப் பற்றி தவறாகக் கூறியதில்லை. மாறாக, தாம் உணவளித்து வந்த கோப்பி இப்போது இல்லை என்று, எபி ரஸாலி என்பவர் சோகத்துடன் கூறினார்.
கோப்பிக்கு எதிரான இத்தகைய திடீர் மற்றும் கொடூரமான கொலை மனரீதியில் தங்களை பெரிதும் பாதித்திருப்பதாக, அதற்கு தினமும் உணவளித்து வந்த ரஸாலியும் மற்றொருவரும் தெரிவித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *