ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் முன் அர்த்த மண்டபத்தில் இளையராஜா வெளியேற்றம்!

- Muthu Kumar
- 16 Dec, 2024
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில் நுழையவிடாமல் இசையமைப்பாளர் இளையராஜாவை தடுத்துநிறுத்தி வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்கழி மாதப் பிறப்பானது டிசம்பர் 16ஆம் தேதியான இன்று தொடங்குகிறது. இந்நிலையில் மார்கழி மாதம் முழுக்க திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் சீக்கிரம் எழுந்து நீராடி அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று, ஆண்டாள் பாடிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பாசுரங்களைப் பாடி துதிப்பர். இந்த வழக்கம், ஆண்டாள் இறைவன் ரெங்கமன்னாரை பூஜித்த காலத்தில் இருந்து உருவானதாகக் கூறப்படுகிறது.
இதனால், இந்த வழிபாடு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆலயத்திலும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு, இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ஆண்டாள், திருப்பாவை பட்டு அணிந்து இறைவன் ரெங்கமன்னாருடன் காட்சியளித்தார்.
இதனையொட்டி, மார்கழி முதல் தேதியில் ஆண்டாளை தரிசிக்க, இசைஞானி இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு அதிகாலையிலேயே சென்றார். அப்போது அங்கு சுவாமி தரிசனம் செய்ய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கருவறைக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா நுழைய முயன்றபோது, அங்கு இருக்கும் அந்தணர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே, கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார், இளையராஜா.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் இருந்து இசைஞானி இளையராஜா வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இறைவனை பல பாடல்களில் பாடிய இசைஞானிக்கே இந்த கதியா என நெட்டிசன்கள் கொதித்து எழுந்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
திரைத்துறையில் 50ஆவது ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் இளையராஜா, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். கர்நாடக இசை, மேற்கத்திய இசை, நாட்டுப்புற இசையில் நல்ல பண்டிதம் பெற்றவர். 'தாய் மூகாம்பிகை' திரைப்படத்தில் இவர் பாடிய ஜனனி ஜனனி ஜகம் நீ பாடலை, யாரும் அவ்வளவு உயிரோட்டமாகப் பாடமுடியாது. அப்படிப்பட்டவரை பிரமாணர் அல்லாதவர் என்னும் வட்டத்தில் சுருக்கி, அவரை அர்த்த மண்டபத்துக்குள் நுழைய அனுமதி மறுத்திருக்கின்றனர்.
முன்னதாக, மூதறிஞர் ராஜாஜி அவர்கள் ஆண்டாள் பற்றி பேசிய கருத்தை கவிஞர் வைரமுத்து சொன்னபோது, கவிஞர் வைரமுத்து பிரமாணர் அல்லாதவர் என்பதால், அவரை மன்னிப்புக்கேட்கச் சொல்லி ஆண்டாள் கோயிலின் ஜீயர்கள் பிரச்னை செய்தனர். இந்நிலையில்,தற்போது பிராமணர் அல்லாத இளையராஜாவுக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்தேறியிருப்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *