தடுப்புச் சுவர் எழுப்புவதைத் தவிர்த்து முக்கிய விவகாரங்களுக்கு தீர்வுகாணுங்கள்-ஜாயிட் இப்ராஹிம் !
- Muthu Kumar
- 09 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 9-
மலேசியா- தாய்லாந்து எல்லையில் நூறு கிலோமீட்டர் நீளம் கொண்ட தடுப்புச் சுவரை எழுப்பப் போவதாக கிளந்தான் மாநில அரசாங்கம் அறிவித்திருப்பதை சட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் ஜாயிட் இப்ராஹிம் கண்டனம் செய்துள்ளார்.அதனை விடுத்து, பல முக்கியமான கட்டமைப்பு விவகாரங்களுக்கு அது தீர்வுகாண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஜொகூரின் மேம்பாட்டுடன் கிளந்தானை ஒப்பிட்டுப் பேசிய அவர், இரவுவிடுதிகளை ஒழிப்பதிலும் எதிர்மறையான சிந்தனைகளை விதிப்பதிலுமே கிளந்தான் தலைவர்கள் தங்கள் கவனத்தைச் செலுத்தி வருகின்றனர் என்று கிளந்தானில் பிறந்தவரான ஜாயிட் சுட்டிக் காட்டினார்.உடைந்த UN குழாய்களைப் பழுதுபார்ப்பதற்கும் நாள்தோறும் குப்பைக் கூளங்களை அகற்றுவதற்கும் நெல்வயல்களுக்கு நீர்பாசனம் செய்வதற்கும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான வசதிகளை செய்வதற்கும் கிளந்தான் அரசாங்கத்திடம் பணம் இல்லை. ஆனாலும், தடுப்புச் சுவரை நிர்மாணிக்க அம்மாநிலத் தலைவர்கள் விரும்புகின்றனர் என்று தமது எக்ஸ் தளப் பதிவில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கடத்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கும் வெள்ளப் பேரிடரைத் தடுப்பதற்கும் தடுப்புச் சுவரொன்றை எழுப்பப் போவதாக கிளந்தான் அரசாங்கம் செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது.ஒப்புதலைப் பெறுவதற்காக அப்பரிந்துரை மத்தியஅரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மலேசியாவின் ஏழ்மை மிக்க மாநிலங்களில் கிளந்தானும் ஒன்றாகும். நாட்டின் மொத்த உற்பத்தியில் கிளந்தானின் பங்களிப்பு வெறும் 1.8 விழுக்காடு மட்டுமே ஆகும்.
கிளந்தானைப்போல் அல்லாது, மந்திரி பெசார் ஓன் ஹபீஸ் காஸி தலைமயில் ஜொகூர் மாநிலம் பெருவளர்ச்சி கண்டிருப்பதை ஜாயிட் சுட்டிக் காட்டினார். இளைஞரான ஒன் ஹபீஸ், ஜொகூரை மேம்பாடு கண்ட மாநிலமாக வரைவில் மாற்றிவிடுவார் என்றார் ஜாயிட்.ஜொகூரின் கூலாய் நகரும் முக்கிய பொருளாதார மையமாக மாறும் என்று குறிப்பிட்ட ஜாயிட், கிளந்தானை வழி நடத்துவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது பிகேஆர் கட்சியைச் சேர்ந்த இளந்தலைவர் ஒருவரை தயார் செய்வது நல்லது என்று அறிவுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *