பாசீர் கூடாங் நெடுஞ்சாலையின் விபத்துக்கு காரணமான லோரி ஓட்டுநரை போலீசார் தேடல்!
- Muthu Kumar
- 07 Nov, 2024
ஜொகூர் பாரு, நவ. 7-
பாசீர் கூடாங் நெடுஞ்சாலையின் 14 ஆவது கிலோ மீட்டரில் எதிர் திசையில் பயணித்து விபத்து ஏற்படக் காரணமாக இருந்த லோரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.ஹோண்டா சிவிக் காரும் அடையாளம் தெரியாத லோரியும் சம்பந்தப்பட்ட விபத்து தொடர்பில் தாங்கள் புகாரைப் பெற்றுள்ளதாக ஸ்ரீ ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது சோஹாய்மி இஷாக் கூறினார்.
இந்த விபத்து கடந்த திங்கள்கிழமை விடியற்காலை 2.00 மணியளவில் நிகழ்ந்ததாக நம்பப்படுவதாகக் கூறிய அவர், அந்த நெடுஞ்சாலையின் இடது தடத்தில் ஹோண்டா சிவிக் காரில் பயணித்துக் கொண்டிருந்த 18 வயது இந்தோனேசிய ஆடவர் எதிர்திசையில் லோரி ஒன்று வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகச் சொன்னார்.
அந்த லோரியைத் தவிர்க்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த அக்கார் சாலையின் இடது பக்க சாலைத் தடுப்பை மோதி விபத்துக்குள்ளானது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். இந்த விபத்தில் நெற்றி, இடது கை மற்றும் காலில்' காயங்களுக்குள்ளான அந்த ஆடவர் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றார் என்றார் அவர்.
இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 42(1)ஆவது பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ள வேளையில் சம்பந்தப்பட்ட லோரி ஓட்டுநரை தாங்கள் தேடி வருவதாக அவர் மேலும் கூறினார்.நெடுஞ்சாலையின் எதிர்திசையில் பயணித்த லோரி காருடன் விபத்துக்குள்ளாவதை சித்தரிக்கும் 16 விநாடி காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *