மன்னிப்பு என்பது என்னைப் பொறுத்தவரையில் பொருளற்றது-ஆண்டனி லோக்!
- Muthu Kumar
- 29 Oct, 2024
கோலாலம்பூர், அக். 29-
1எம்டிபி ஊழல் தொடர்பில் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மன்னிப்புக் கோரியிருந்ததை ஜசெக தலைைைமச் செயலாளர் ஆண்டனி லோக் நேற்று நிராகரித்தார். நஜிப்பின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அந்த மன்னிப்பு அர்த்தமற்ற ஒன்று என்று அவர் பதிலளித்தார்.மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பது பிரச்சினை அல்ல. மன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும் குற்றம் குற்றமே என்று அவர் கூறினார்.
நஜிப் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர். அக்குற்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றமும் நிலைநிறுத்தியுள்ளது. உண்மை இவ்வாறு இருக்கையில், மன்னிப்பு என்பது என்னைப் பொறுத்தவரையில் பொருளற்றது என்று கோலாலம்பூரில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பின்னர் லோக் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் உத்தேச வீட்டுக் காவல் உத்தரவு மசோதா நஜிப்புடன் சம்பந்தப்பட்ட ஒன்றல்ல. மாறாக, சிறைச்சாலைச் சீர்திருத்தம் சம்பந்தப்பட்டது என்று லோக் விளக்கினார். அந்த உத்தேச சட்டம் நிறைவேற்றப்படுமானால், கொடுங் குற்றவாளிகளுக்கு அது அமல்படுத்தப்படாது. குறிப்பிட்ட சில குற்றங்களைப் புரியும் நபர்களை வீட்டுக் காவலில் வைக்க முடியாது.
குறிப்பாக, கடுமையான குற்றவாளிகளை வீட்டுக் காவலில் வைக்க அச்சட்டம் அனுமதிக்காது. நஜிப்பைப் பொறுத்தமட்டில், இன்னும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொண்டு வருகிறார் என்றார் அவர். 1எம்டிபி நிறுவனம் வீழ்ச்சி கண்டதற்கு மலேசியர்களிடம் தாம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக கடந்த வாரம் நஜிப் தெரிவித்திருந்தார். அந்நிறுவனத்துடன் தொடர்புடைய எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டிரியான் பெர்ஹாட்டுக்குச் சொந்தமான பணத்தைக் கையாடிய குற்றத்திற்காக அவர் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். நஜிப்பின் மன்னிப்பைத் தாம் ஏற்றுக் கொள்வதாக இரண்டு தினங்களுக்கு முன்பு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *