கைதான அல்லு அர்ஜுன் சொந்த ஜாமீனில் ரூ.50 ஆயிரம் செலுத்தி வெளியே வந்தார்!

top-news
FREE WEBSITE AD

அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் டிச.5ம் தேதி வெளியான படம் புஷ்பா 2. இப்படத்தின் பிரீமியர் காட்சி டிச.4ம் தேதி சந்தியா திரையரங்கில் வெளியானது. இதை காணச்சென்ற 35 வயது பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். அந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அல்லு அர்ஜுன் நேற்று முன்தினம் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெருத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. கைதான அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத் கோர்ட் 14 நாட்கள் சிறை தண்டனை விதித்தது. தனிப்பட்ட முறையில் அவர் ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்க கோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் நேற்று முன்தினம் இரவை அவர் சஞ்சல்குடா மத்திய சிறையில் தான் கழித்தார்.

இதனால் சிறைக்கு வெளியே ரசிகர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். ஜாமீன் கிடைத்தும் அல்லு அர்ஜுன் சிறையில் அடைக்கப்பட்டது பிரபலங்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இரவு சிறையில் இருந்த அவர் காலை சிறைச்சாலையின் பின்கதவு வழியாக வெளியேறி, வீட்டுக்கு சென்றார்.

வீட்டுக்கு சென்றதும் மனைவி, குழந்தைகளை ஆரத்தழுவி முத்தமிட்ட பின்னர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார். அதில், 'அனைவரின் அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி. என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் நலமாக இருக்கிறேன். கவலைப்பட ஒன்றுமில்லை. சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்பதால் ஒத்துழைப்பு கொடுப்பேன். மீண்டும் ஒருமுறை அந்த குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். அது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். இதுபோல நடந்ததற்காக வருத்தப்படுகிறேன்,' என்றார்.

சிறைவாசத்திற்கு பின் அவர் அளித்த முதல் பேட்டி என்பதால், இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிறையில் அவர் வெற்று தரையில் படுத்து உறங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சொந்த ஜாமீனில் ரூ.50 ஆயிரம் செலுத்தி அவர் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *