பாஸ் கட்சியைப் பொறுத்த வரை இன பதற்றத்தை தூண்டி விடுவது கைவந்த கலை-ஹோ சி யாங்!
- Muthu Kumar
- 28 Oct, 2024
கோலாலம்பூர், அக். 28 -
சீனக் கலாச்சார விழா ஒன்று தொடர்பில் உணர்ச்சிகரமான மற்றும் தவறான தகவல்களைப் பரப்பி விடுவதன் மூலம், அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலே இன பதற்றத்தை தூண்டி விடுவதாக, பஹாங் மாநில ஜசெக இளைஞர் பிரிவுத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அக்மால் 'பாஸ் கட்சியைப் போன்று செயல்படுவதாகவும்' பகாங்கின் தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினருமான ஹோ சி யாங் குற்றஞ்சாட்டியுள்ளார்.பேராக், தெலுக் இந்தானில் அண்மையில் நடந்த மலேசிய அனைத்துலக குவான் கோங் கலாச்சார விழா குறித்து பாஸ் கட்சியினால் பரப்பிவிடப்பட்டு வரும் ஓர் அடிப்படையற்ற வதந்தி மீது அக்மால் தற்போது 'சவாரி' செய்து வருவதாகவும் ஹோ குற்றஞ்சாட்டினார்.
அந்த விழாவில் கலந்து கொண்டிருந்த சீன நாட்டுப் பிரஜைகள், தங்கள் நாட்டின் கொடியை அசைத்திருந்த சம்பவத்தை சுட்டிக் காட்டி, 'தேசபக்தியற்ற' விழா என்று முத்திரை குத்தியதன் மூலம், பாஸ் கட்சி ஒரு சர்ச்சையை தொடக்கி வைத்திருக்கிறது.பாஸ் கட்சியின் அத்தகைய அடிப்படையற்ற குற்றச்சாட்டை அக்மால் தமது கையிலெடுத்து தவறான தகவல்களை பரப்பி வருவதுடன், அவ்விழா குறித்து போலீசில் புகார்களைச் செய்யுமாறு பேராக் அம்னோ இளைஞர் பிரிவுக்கு உத்தரவிடப் போவதாகவும் மிரட்டல் விடுத்திருப்பதாக ஹோ தெரிவித்தார்.
குவான் கோங் பேரணிக்கு பதிலாக, 300க்கும் மேற்பட்டோர், தெலுக் இந்தான் சாய்ந்த கோபுர வளாகத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ஜாலுர் கெமிலாங் கொடியை ஏந்தியவாறு கூடியிருந்தனர்.அக்கூட்டத்தினர் ஜாலுர் கெமிலாங்கை அசைத்ததுடன் தேசிய கீதத்தைப் பாடியதாக, நியூ ஸ்டிரேட் டைய்ம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இம்மாத மத்தியில் நடந்த அந்த மலேசிய அனைத்துலக குவான் கோங் கலாச்சார விழாவில் கலந்து கொண்ட சீன நாட்டுப் பிரஜைகள்தான் தங்கள் நாட்டுக் கொடிகளை அசைத்ததாகவும் மலேசியர்கள் யாரும் அவ்வாறு செய்யவில்லை என்றும் கூறிய ஹோ, இதன் தொடர்பில் அவ்விழா ஏற்பாட்டாளர்கள் ஒரு பொது மன்னிப்பை கோரியிருப்பதாகவும் தெரிவித்தார்.அவ்விழாவில் வெளிநாட்டுக் கொடிகளை அசைக்கும் திட்டம் எதுவும் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
"பாஸ் கட்சியைப் பொறுத்த வரையில் இன பதற்றத்தை தூண்டி விடுவது அதற்கு கைவந்த கலையாக இருந்து வருகிறது. சீன சமூகத்தை அவதூறாக பேசுவதில் சேர்ந்து கொள்ளும் ஒரு வாய்ப்பை அக்மால் தற்போது கைப்பற்றிக் கொண்டுள்ளார்” என்று ஹோ குற்றஞ்சாட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *