விரைவுப் பேருந்தில் கைப்பேசியை "சார்ஜ்" செய்த பதின்ம வயது சிறுவன் மரணம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ. 4-

விரைவுப் பேருந்தில் தன்னுடைய கைப்பேசியை "சார்ஜ்" செய்து கொண்டிருந்தபோது பதின்ம வயது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து சிறப்புக் குழுவொன்று விசாரணை நடத்தும் என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் நேற்று தெரிவித்தார்.

அக்குழுவில் தரைப்போக்குவரத்து முகமையின் (அபாட்), சாலைப் போக்குவரத்துறை (ஆர்டிடி), மலேசிய சாலைப் போக்குவரத்து ஆய்வுக்கழகம் (மீரோஸ்) ஆகியவற்றின் அதிகாரிகள் அதில் இடம் பெற்றிருப்பார்கள் என்று லோக் குறிப்பிட்டார்.இச்சம்பவத்தை போக்குவரத்து அமைச்சு மிகக் கடுமையாகக் கருதுகிறது. ஆர்டிடி துறையினர் மேல்விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக அந்தப் பேருந்தை உடனடியாகப் பறிமுதல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளேன் என்றார் அவர்.

மின்சாரத் தாக்குதலுக்கு என்ன காரணம் என்பதை சிறப்புக் குழு கண்டறியும். பயணிகளின் பாதுகாப்பைக் கருதியும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் இது உதவும் என்றார். பதினெட்டு வயதான அச்சிறுவனின் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் லோக் தெரிவித்துக் கொண்டார்.

சனிக்கிழமை மாலை 6மணியளவில் பினாங்கு செண்ட்ரல் முனையத்தில் விரைவுப் பேருந்தொன்றின் இருக்கையொன்றில் அச்சிறுவன் சுயநினைவிழந்த நிலையில் கிடப்பதைப் போலீசார் கண்டுள்ளனர். அதற்கு முன்பு அச்சிறுவன் அலறியதையும் சிலர் செவிமடுத்துள்ளனர். அவனுடைய வாயிலிருந்து நுரையும் வெளியாகியிருந்தது. ஒரு சில நிமிடங்களுக்குள் அங்கு வந்தடைந்த மருத்துவ உதவியாளர்கள் அவன் இறந்து விட்டதை உறுதிப்படுத்தினர்.பதினெட்டு வயதான அச்சிறுவன். பினாங்கு செல்வதற்காக கேஎல் செண்ட்ரல் முனையத்திலிருந்து பேருந்தில் ஏறியுள்ளான்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *