மைசூர் தசரா திருவிழாவில் முதல் முறையாக இசைஞானி மற்றும் இசைப்புயல்!
- Muthu Kumar
- 06 Oct, 2024
உலகப் புகழ் பெற்ற மைசூர் தசரா திருவிழாவில் முதல் முறையாக இசைஞானி இளையராஜா மற்றும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் இசைக்கச்சேரிகள் நடைபெற உள்ளது.மைசூர் தசரா நிகழ்ச்சிக்கு இடையே 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
கர்நாடக மாநிலம் மைசூர் தசரா திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். இந்த விழா ஆயுத பூஜையை முன்னிட்டு ஆண்டுதோறும் 10 நாள் கோலாகலமாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான 415-வது தசரா விழா கடந்த 3 ஆம் தேதி தொடங்கி வருகிற 12 தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்படும் என கர்நாடக அரசு அறிவித்தது.
இந்த விழாவை மைசூர் சாமுண்டிமலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து மலர் தூவி பிரபல எழுத்தாளர் ஹம்பா நாகராஜய்யா தொடங்கி வைத்தார். விழாவில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். வியாழக்கிழமை காலை 9.30 மணி அளவில் சுப விருச்சிக லக்கனத்தில் மைசூர் தசரா விழாவை தொடங்கி வைக்கப்பட்டது.
தசரா திருவிழாவானது 10 நாட்கள் பல்வேறு பண்பாடு, கலை, கலாசாரம், வீர விளையாட்டுகளுடன் தசரா விழா, இளைஞர் விழா, திரைப்பட விழா, விவசாயிகள் விழா, மகளிர் விழா என பல பெயர்களுடன் கொண்டாடப்படுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் எனும் தசரா ஊர்வலம் வருகிற 12 ஆம் தேதி அரண்மனை வளாகத்தில் தொடங்குகிறது.
தசரா விழாவையொட்டி மைசூர் மாநகரம் முழுவதும் 133 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இரவு 7 மணி முதல் 10 மணி வரை 3 மணி நேரம் நகரம் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கிறது. மைசூர் தசரா விழா தொடங்கியதை தொடர்ந்து நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திரும்பும் பக்கம் எல்லாம் மக்கள் கூட்டத்தை காண முடிகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தசரா திருவிழாவில் முதல் முறையாக இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் மற்றும் இளையராஜா ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மைசூர் தசரா நிகழ்ச்சிக்கு இடையே யுவ தசரா நிகழ்ச்சி 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்சிச்யில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தொடக்க நாளில் அதாவது 6 ஆம் தேதி பாடகி ஷ்ரேயா கோஷல் மற்றும் அவரது குழுவினர் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாம். அதற்கு மறுநாள் இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ரவி பர்சூர் மற்றும் அவரது குழுவினர் இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். பாடகர் பத்ஷாஹ்ஹின் நிகழ்ச்சி 8 ஆம் தேதி நடைபெறுகிறது.
வரும் 9 ஆம் தேதி அதாவது புதன்கிழமை ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சியும், 10 ஆம் தேதியும் இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரியும் நடைபெற உள்ளதாம். மைசூர் தசரா திருவிழாவின் போது நடைபெறும் யுவ தசரா நிகழ்வில் முதல் முறையாக இசையமைப்பாளர்கள் ஏ ஆர் ரகுமான், இளையராஜா ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *