பிஎல்கேஎன் 3.0 பயிற்சி ஜனவரி 12 ல் ஆரம்பம்!
- Muthu Kumar
- 17 Nov, 2024
சிரம்பான், நவ. 17
தேசிய சேவைத் திட்டம் 3.0 (பிஎல்கேஎன் 3.0) வரும் ஜனவரி 12ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. அதில், எஸ்பிஎம் தேர்வை முடித்திருக்கும் 200 ஆண் பயிற்சியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள விருக்கின்றனர். அடுத்த கட்டத்தை, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் விரிவுபடுத்துவதற்கு முன்னர், இது ஒரு பயிற்சி அல்லது சோதனைக் கட்டமாக இருக்கும் என்று, துணைத் தற்காப்பு அமைச்சர் அட்லி ஸஹாரி தெரிவித்தார்.
இப்பயிற்சி இரண்டு வாரங்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்றும் கோலாலம்பூரில் உள்ள டிரான்சிட் ராணுவ முகாமைச் சேர்ந்த 515 அஸ்கார் வத்தானியா ராணுவப் பட்டாளத்தினால் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். யான பயிற்சி 2025ஆம் ஆண்டு ஜூனில் தொடங்கப்பட விருக்கும் வேளையில், ஜனவரி 12ஆம் தேதி தொடங்க விருக்கும் பயிற்சி ஒரு சோதனைப் பயிற்சியாக விளங்கும்.
இச்சோதனைப் பயிற்சி மூலம் உண்மையான பயிற்சித் திட்டத்திற்கான பாடத் திட்டத்தை மதிப்பீடு செய்ய முடியும். "முந்தைய பிஎல்கேஎன் பயிற்சிகள் மூலம் நாங்கள் அதிக அனுபவங்களைக் கொண்டிருக்கின்றோம். ஜனவரி 12ஆம் தேதி தொடங்கும் சோதனைப் பயிற்சி மூலம், எங்களின் செயல்பாட்டை எங்களால் விரைவுப்படுத்த முடியும் என்பதுடன், ஜூன் மாதப் பயிற்சிக்கு எங்களால் தயாராகவும் முடியும் என்று நான் நினைக்கின்றேன்.
“இம்முறை பிஎல்கேஎன் பயிற்சிகள் அனைத்தும், நாடு முழுமையிலும் உள்ள வத்தானிய ராணுவ முகாம்களில் நடத்தப்படும். ஜனவரி 12ஆம் தேதி பயிற்சி ஒரே ஒரு முகாமில் மொத்தம் 200 ஆண் பயிற்சியாளர்களுடன் தொடங்கும்" என்று, அட்லி ஸஹாரி தெரிவித்தார்.ஒரே முகாமில் 200 பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதில் தற்காப்பு அமைச்சுக்கு பிரச்சினை ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
"பிஎல்கேஎன் பயிற்சியில், 30 வயதுக்குட்பட்டவர்களை சேர்த்துக் கொள்ள முடியும் என்று சட்டம் கூறினாலும், இப்போதைக்கு நாங்கள் எஸ்பிஎம் படிப்பை முடிந்த மாணவர்கள் மீதே கவனம் செலுத்துகிறோம்” என்று, சிரம்பானில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது அட்லி ஸஹாரி கூறினார். இந்நிலையில், பிஎல்கேஎன் 3.0 பயிற்சித் திட்டத்திற்காக, கோலாலம்பூர் மற்றும் பகாங் உட்பட நாடு முழுமையிலும் உள்ள மொத்தம் 13 ராணுவ முகாம்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக இதற்கு முன்னர் தகவல் சாதனங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *