இஸ்ரேலை மலேசியா அங்கீகரித்தது கிடையாது-அன்வார்!
- Muthu Kumar
- 17 Nov, 2024
லிமா (பெரு), நவ. 17 -
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன விவகாரம் மீதான தனது நிலைப்பாட்டில் மலேசியா தொடர்ந்து உறுதியாகவே இருக்கிறது. அதோடு, அரசதந்திர ரீதியில் இஸ்ரேலை மலேசியா அங்கீகரித்ததும் கிடையாது என்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்திக் கூறியுள்ளார். பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை ஆதரிப்பதில் மலேசியா தொடர்ந்து ஈடுபட்டிருப்பதாக கூறிய அன்வார், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக, அதிகமான அனைத்துலக கருத்தரங்குகளில் தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதையும் நிறுத்தியதில்லை என்றார்.
பாலஸ்தீன மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான ஓர் ஆட்சேப நடவடிக்கையாக, இஸ்ரேலுடன் அரசதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள அல்லது அந்நாட்டுக்கு தூதரக அதிகாரிகளை மலேசியா அனுப்பியதில்லை என்று அவர் கூறினார்.“அரசதந்திர உறவுகளின் அடிப்படையில் இஸ்ரேலை நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்பதுடன், மலேசியாவில் வர்த்தகம் புரிய அல்லது அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட அவர்களை அனுமதிக்கவில்லை என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்" என்று அன்வார் தெரிவித்தார்.
ஐநாவில் உறுப்பியத்துவம் பெற்றுள்ள ஒரு நாடாக இஸ்ரேல் இருந்து வந்தாலும், அந்நாட்டின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை நாங்கள் இன்னமும் நிராகரித்து வருகிறோம் என்று, பெரு நாட்டுத் தலைநகர் லிமாவில் மலேசிய செய்தியாளர்களை சந்தித்தபோது, நிதி அமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.சிஎன்என்னின் ரிச்சர்ட் குவெஸ்டுடனான அண்மைய இஸ்ரேல்-பாலஸ்தீனம் மீதான தமது பேட்டி குறித்து கருத்து கேட்டபோது அன்வார் இதனைத் தெரிவித்தார்.
“ஒரு நாடாக இருப்பதற்கும் தன்னை தற்காத்துக் கொள்ளவும் இஸ்ரேலுக்கு இருக்கும் உரிமையை மலேசியா அங்கீகரித்திருக்கிறது” என்று அப்பேட்டியில் அன்வார் கூறியிருந்ததாக கூறப்பட்டு வருகிறது. அப்பேட்டியின் ஓர் அங்கம் கொண்ட காட்சிகள் தற்போது பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.எனினும், குழப்பத்தை ஏற்படுத்த அக்காணொளி “பொறுப்பற்ற தரப்பினரால் அக்காட்சிகள்திருத்தப்பட்டிருப்பதாக, அரசாங்கப் பேச்சாளர் ஃபாமி பாட்சில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கூறியிருந்தார். மலேசிய அரசாங்கமோ அல்லது தாமோ இஸ்ரேலுடன் “கூட்டு” சேர்ந்திருந்ததாக கூறப்படுவதையும் குற்றம் சுமத்தப்படுவதையும் அன்வார் மறுத்துள்ளார்.
"குறுகிய அரசியல் நலன்களுக்காக சில தரப்பினரால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ள அத்தகைய குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை மற்றும் அவதூறானவை. "இத்தகைய அவதூறுகளைப் பரப்புபவர்கள் அனைத்துலக அரசியல் சூழலைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உண்மைகளை திசை திருப்புவதற்கான காரணங்களை வேண்டுமென்றே தேடுகிறார்கள். "பாலஸ்தீனத்திற்கான நீதிக் கொள்கையை மலேசியா தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று அன்வார் தெரிவித்தார் "லிமாவில் நடந்த ஏபெக் மாநாட்டின் முக்கிய கருப்பொருளானது பொருளாதாரம் மற்றும் வர்த்தகமாக இருந்த போதிலும், அம்மாநாட்டில் பாலஸ்தீன விவகாரத்தை எழுப்பிய ஒரே நாடு மலேசியாதான் என்றும் அன்வார் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *